விமான நிலையத்திலிருந்து யாழ். நோக்கிச் சென்ற வான் மோதி தாய் பலி!
புத்தளம் – அநுராதபுரம் பிரதான வீதியில் லிந்தவெவ பிரதேசத்தில் தாய் மற்றும் மகள் மீது வான் மோதியதில் 27 வயதுடைய தாய் உயிரிழந்துள்ளதாக நொச்சியகம பொலிஸார் குறிப்பிட்டனர்.
நேற்று பகல் 12.30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் லிந்தவெவ பிரதேசத்தைச் சேர்ந்த தக்ஸிலா மதுசரனி திஸநாயக்க என்ற இரண்டு பிள்ளைகளின் தாயே உயிரிழந்தவர்.
தாயும், மகளும் தங்களின் லிந்தவெவ பிரதேசத்தில் அமைந்துள்ள தங்களது வீட்டுக்கு முன்னால் முற்றத்தில் இருக்கும்போது அதிக வேகத்தில் வந்த வான் வீதியிலிருந்து விலகி தாய் மற்றும் மகள் மீது மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒரு வயதும் ஒரு மாதமுமான மகளுடன் தனது மூத்த மகள் பாலர் பாடசலைவிட்டு வரும் மட்டும் வீட்டுக்கு முன்னால் காத்துநின்றபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வேகமாக வந்து பாதையிலிருந்து விலகிய வான் வீதியின் அருகிலிருந்த கொங்கிரீட் தூணில் மோதி, தாய் மற்றும் மகள் மீதும் மோதியதுடன் வீட்டின் சுவரையும் இடித்துத் தள்ளியுள்ளதாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
விபத்தில் காயமுற்ற ஒன்றரை வயது குழந்தை சுவருக்கு கீழே கிடந்ததாகவும் பிரதேசவாசிகள் அதனை அகற்றி குழந்தையைக் காப்பாற்றி வைத்தியசலைக்கு அனுப்பி வைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த வான் வெளிநாட்டிலிருந்து வந்த தம்பதியிரை விமான நிலையத்திலிருந்து ஏற்றிக்கொண்டு யாழ்ப்பாணத்திற்கு சென்றதாகவும், வாகனத்தின் சாரதி மற்றும் தம்பதியினர் சிறு காயத்திற்குள்ளாகி நொச்சியாகமம் வைத்தியசலையில் சிகிச்சைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
நொச்சியகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தாய் மற்றும் மகள் அனுராதபுர போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் தாய் உயிரிழந்த்தாக தெரிவிக்கப்படுகிறது.
ஒன்றரை வயதான குழந்தை அனுராதபுர மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.