மனச்சோர்வைக் கண்டறிவதற்கு புதிய தொழிநுட்பம் கண்டுபிடிப்பு!
அமெரிக்காவின் எம்.ஐ.டி. பல்கலைக்கழக ஆய்வாளர்கள் செயற்கை நுண்ணறிவு நுட்பத்தைக் கொண்டு மனச்சோர்வைக் கண்டறிவதற்கான வழியை உருவாக்கியுள்ளனர்.
மனச்சோர்வு தொடர்பான புள்ளி விவரங்கள் உண்மையிலேயே சோர்வு அளிக்கக்கூடியவை. உலக சுகாதார அமைப்பின் தகவல்படி ஆண்டுதோறும் 30 கோடி பேர் மனச்சோர்வால் பாதிக்கப்படுகின்றனர்.
ஆண்டுதோறும் 8 லட்சம் பேர் மனச்சோர்வால் தற்கொலை செய்துகொள்கிறார்கள். மனச்சோர்வுக்கான அறிகுறிகள் மாறுபட்டவையாக அமைகின்றன.
இதனால் மனச்சோர்வைக் கண்டறிவதும் சிக்கலாகவே உள்ளது. இந்நிலையிலேயே இந்த புதிய தொழிநுட்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நரம்பு மண்டல வலைப்பின்னல் மாதிரியை அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்பட்டுள்ள செயற்கை நுண்ணறிவு அமைப்பு, மனிதப் பேச்சில் உள்ள அம்சங்களை அலசி ஆராய்வதன் மூலம் மனச்சோர்வின் அறிகுறிகளைக் கண்டறியும் திறன் கொண்டது.
ஒலிக்கோப்பு, நேர்காணல், உரையாடல் ஆகிய தொகுப்புகளை அலசி ஆராய்ந்து இந்த நுட்பம் செயற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.