பீல்ட் மார்ஷல் பட்டத்தை பறிக்க சட்டத்தில் இடமில்லை!
பீல்ட் மார்ஷல் பட்டத்தை நீக்குவதற்கான ஏற்பாடுகள் சட்டத்தில் இல்லையென ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
சரத் பொன்சேகாவின் பீல்ட் மார்ஷல் பட்டத்தை பறிக்க ஜனாதிபதி ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில், கம்பஹாவில் நேற்று (ஞாயிறறுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்த சரத் பொன்சேகாவிடம் இதுகுறித்து ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பினர்.
அதற்கு பதிலளித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பீல்ட் மார்ஷல் பட்டத்தை வழங்குவதற்கான ஏற்பாடுகள் சட்டத்தில் காணப்படுகின்ற போதும், அதனை நீக்குவதற்கான ஏற்பாடுகள் இல்லையென அவர் இதன்போது குறிப்பிட்டார்.
இறுதி யுத்தத்தின் போது இராணுவ தளபதியாக பதவி வகித்த சரத் பொன்சேகாவிற்கு, யுத்தத்தின் போது அவர் ஆற்றிய பணிகளை பாராட்டி பீல்ட் மார்ஷல் பட்டம் வழங்கப்பட்டது.
நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இப்பட்டத்தை வழங்கிவைத்ததோடு, இலங்கையில் இப்பட்டத்தை பெற்ற முதலாவது நபர் என்ற பெருமையும் சரத் பொன்சேகாவையே சாரும்.
எனினும், ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை கொலைசெய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டதில் சரத் பொன்சேகாவிற்கும் பங்குண்டு என அண்மைய காலமாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அதன் பின்னணியில், சரத் பொன்சேகாவின் பீல்ட் மார்ஷல் பட்டத்தை நீக்க ஜனாதிபதி ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.