அரசாங்கத்துடன் இணையமாட்டோம்!
மைத்திரி – மஹிந்த தலைமையிலான புதிய அரசாங்கத்துடன் தாம் இணையவுள்ளதாக பிரதியமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகம கூறியுள்ள கருத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் மறுத்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு உலமாக்களை சந்தித்து கலந்துரையாடியபோதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
காலியில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த பிரதியமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகம, புதிய அரசாங்கத்தில் ஐக்கிய தேசிய முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணையவுள்ளனர் என்று கூறியிருந்தார்.
மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரிசாத் பதியுதீன் மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகியோரும் மைத்திரி – மஹிந்த தலைமையிலான புதிய அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கவுள்ளனர் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையிலேயே ரவூப் ஹக்கீம், இவரது இந்தக் கருத்துக்கு மறுப்புத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இதுவரை எந்த விதமான தீர்மானங்களையும் மேற்கொள்ளவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.