அரசியல் நெருக்கடியை தீர்க்க பொதுத் தேர்தலுக்கு செல்லவும்!
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்குத் தீர்வாக நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு பொதுத் தேர்தலுக்கு செல்லவேண்டுமென முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா ஜனாதிபதிக்கு வலியுத்தியுள்ளார்.
அரசியல் ரீதியாக நாட்டில் ஏற்பட்டுள்ள ஸ்தீரத்தன்மைகளுக்கு மத்தியிலேயே அவர் இந்தக் கருத்தினை வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது,
”அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்தின் 70ஆவது உறுப்புரையின் பிரகாரம் நான்கரை வருடங்களுக்கு பின்னரே நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டும்.
ஆனால், நிறைவேற்று அதிகாரத்தின் ஊடாக ஜனாதிபதியால் அதற்கு முன்னரே நாடாளுமன்றைக் கலைக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
19ஆவது திருத்தச்சட்டத்தின் 33ஆவது உறுப்புரையின் பிரகாரம், நாடாளுமன்றை கூட்டும், ஒத்திவைக்கும் மற்றும் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது.
நாடாளுமன்றை சர்வஜன வாக்கெடுப்பின்றி கலைக்க முடியாதென்ற வகையில் 19ஆவது திருத்தச் சட்டத்தில் அறிமுகப்படுத்திய திருத்தத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றமும் தீர்ப்பளித்திருந்தது.
எனவே, ஜனாதிபதிக்கு நாடாளுமன்றைக் கலைக்கும் அதிகாரம் தற்போதும் இருக்கிறது.
அதனை, தேவைப்படும் பட்சத்தில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். அந்தவகையில், மக்களுக்கும் நாட்டுக்கும் தேவைப்படும் போது, ஸ்திரமற்ற நிலையில் உள்ள நாடாளுமன்றை ஜனாதிபதியால் கலைக்கலாம்” என அவர் தெரிவித்துள்ளார்.