கடும் மோசமான நிலையில் இலங்கையின் எதிர் காலம்! ஆபத்தில் சபாநாயகர் பதவி.
இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை, நாடாளுமன்றத்தையும் ஆட்டிப்படைக்கும் அளவுக்கு தீவிரம் அடைந்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
நாடாளுமன்ற ஊழியர்கள் ஜனாதிபதி மைத்திரி சிறிசேனவிற்கு ஆதரவாக செயற்பட ஆரம்பித்துள்ளதுடன் சபாநாயகரின் உத்தரவுகளை ஏற்க மறுத்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசியல் நெருக்கடியை தீர்ப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாமலிருப்பதற்காக ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் சபாநாயகரை விமர்சித்து வருகின்றனர்.
நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க தலைமையிலான நாடாளுமன்ற பணியாளர்கள் சபாநாயகரிற்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர் என குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
தம்மிம தசநாயக்க தனது பணியாளர்களை சபாநாயகரின் உத்தரவுகளை புறக்கணிக்குமாறு வெளிப்படையாகவே உத்தரவிட்டு வருகின்றார்.
அரச ஊழியர் என்ற அடிப்படையில் நான் ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலையே பின்பற்றவேண்டும் என அவர் குறிப்பிட்டு வருகின்றார்.
இதன் காரணமாக ஜனாதிபதியினால் சட்டவிரோதமாக இடைநிறுத்தப்பட்டுள்ள நாடாளுமன்ற அமர்வுகளை மீண்டும் கூட்டுவதற்கான சபாநாயகரின் முயற்சிகள் பலனளிக்காத நிலை காணப்படுகின்றது பாராளுமன்ற செயலாளர் நாயகமும் அதிகாரிகளும் இதற்கு ஒத்துழைப்பை வழங்க மறுக்கின்றனர்.
ஜனாதிபதியையும் புதிய பிரதமரையும் திருப்திப்படுத்துவதற்காக தசநாயக்க வெளிப்படையாகவே சபாநாயகரின் உத்தரவை ஏற்க மறுத்து வருவதுடன் தான் வர்த்தமானி அறிவித்தலையே பின்பற்றவேண்டும் என தெரிவித்து வருகின்றார் என சபாநாயகர் தனக்கு நம்பிக்கைக்குரியவர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஜனாதிபதியின் அறிவிப்பை மீறி நாடாளுமன்றத்தை கூட்ட முயன்றால் நானும் எனது பணியாளர்களும் அதற்கு ஒத்துழைக்க மாட்டேன் என சபாநாயகரிற்கு, தசநாயக்க தெரிவித்துள்ளார் என குறித்த ஊடகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
சமகால சபாநாயகர் கரு ஜயசூரிய ஐக்கிய தேசிய கட்சியை பிரநிதித்துவம் செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான நிலையில் சபாநாயகர் பதவியிலும் மாற்றங்களை ஏற்படுத்த மைத்திரி – மஹிந்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு நாடாளுமன்றம் மூலமே தீர்வு காணப்பட வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சபாநாயகர் மீதான அதிருப்தி, பக்கசார்பான செயற்பாடுகள் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.