ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்!

ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்!

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி தொடர்பில், ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட நாம் தயாராகவே இருக்கிறோம் என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும், ஜனாதிபதியின் செயற்பாட்டால் சர்வதேச ரீதியாக நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

கொழும்பில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு, “சர்வதேசம் இலங்கைக்கான முதலீடுகளை நிறுத்தியுள்ளது. நாட்டின் தற்போது ஏற்பட்டுள்ள இந்த அரசியல் சர்ச்சையால் பொருளாதாரமே பாரிய வீழ்ச்சியை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கிறது.

மைத்திரி – மஹிந்த தரப்பினர் தமக்கான ஆதரவைப் பெற்றுக்கொள்ள பதவி மற்றும் பணத்தைக் கொண்டு ஆட்களை வாங்க முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். ஆனால், அது அவ்வளவு எளிதான காரியமல்ல என்பதை அவர்கள் தற்போது உணர்ந்திருப்பார்கள்.

இந்தநிலையில், அவர்கள் நாடாளுமன்றைக் கலைக்க முயற்சிப்பதாகவும் கூறப்படுகிறது. எனினும், அரசியலமைப்புக்கு இணங்க 4 1/2 வருடங்களுக்கு முன்னர் நாடாளுமன்றைக் கலைக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை.

நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையான ஆதரவு இருந்தால் மட்டுமே நாடாளுமன்றைக் கலைக்க முடியும். எனவே, ஜனாதிபதி உள்ளிட்ட தரப்பினர் இதனை உணர்ந்துக்கொள்ள வேண்டும்.

குறித்த காலத்துக்கு முன்னர் நாடாளுமன்றைக் கலைப்பதானது மக்களின் உச்சக்கட்ட ஜனநாயகத்தை மீறும் செயல் என்பதாலேயே, 19 ஆவது திருத்தச்சட்டத்தின் ஊடாக நாடாளுமன்றைக் குறித்த காலத்துக்கு முன்னர் கலைக்க முடியாது எனும் சரத்து கொண்டுவரப்பட்டது.

இன்று ஜனாதிபதி செய்த செயற்பாட்டால் அரசியலமைப்பு, அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக நாடு மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அடுத்த சில வாரங்களிலேயே டொலர் ஒன்றின் பெறுமதி 200 ரூபாவாகவும் உயர்வடையவுள்ளது.

சுற்றுலாத்துறையும் வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கைக்கு செல்ல வேண்டாம் என சுற்றுலாப் பயணிகளுக்கு அந்தந்த நாடுகளால் எச்சரிக்கப்படுகிறது.

நாம், இலங்கையை ஒரு முன்னுதாரணமான நாடாக மாற்றியமைக்கவே இத்தனைக் காலமாக முயற்சித்தோம். ஆனால், இன்று அனைத்தும் இல்லாதொழிக்கப்பட்டுள்ளது.

ஜனநாயகத்தின் நாயகன் என அனைவராலும் பார்க்கப்பட்டுவந்த ஜனாதிபதி, தற்போது நாடாளுமன்றைக் கூட்டுவதற்குக்கூட அச்சப்படுகிறார். இது ஒரு சிறிய பிரச்சினையல்ல. சர்வதேசத்தின் மத்தியில் இலங்கைக்கான நற்பெயர் எல்லாம் முற்றாக இல்லாதுபோயுள்ளது.

தனிப்பட்ட பிரச்சினைகளுக்காக நாட்டை அடகுவைக்கக்கூடாது. எனவே, ஒரு ஸ்தீரமான கொள்கையுடன் எதிர்க்காலத்திலேனும் ஜனாதிபதி செயற்பட வேண்டும்.

நாம் இதுதொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த இப்போதும் தயாராகவே இருக்கிறோம். பிழைகளை சரிசெய்துகொள்ள எமக்கு இன்னும் சந்தர்ப்பங்கள் இருக்கின்றன” என கூறினார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net