மஹிந்த வெற்றி பெற்றால் என்னவாகும்? சம்பந்தனிடம் நேரடி கேள்வி!

மஹிந்த வெற்றி பெற்றால் என்னவாகும்? சம்பந்தனிடம் நேரடி கேள்வி!

நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைகொடுத்து வாங்கக் கூடாது. பதவி அல்லது பணம் கொடுத்து வாங்கக்கூடாது என எதிர்க்கட்சித்தலைவர் இரா. சம்பந்தன் கூறியுள்ளார்.

தமிழ் நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணலிலேயே இதை குறிப்பிட்டுள்ளார். அதில் கேட்கப்பட்ட சில கேள்விகளும், இரா.சம்பந்தனின் பதில்களும் கீழே தரப்பட்டுள்ளன.

நம்பிக்கையில்லா பிரேரணையின் போது மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்து வாக்களிக்க கூட்டமைப்பு முடிவெடுக்க காரணம் என்ன?

“நாங்கள் நபர்களை பற்றி சிந்திக்கவில்லை. அது தொடர்பில் நாங்கள் அக்கறை கொள்ளவில்லை. நபர்களின் அடிப்படையில் நாங்கள் முடிவெடுக்கவில்லை. சில கொள்கைகளின் அடிப்படையில் மற்றும் அரசியல் சாசனத்தின் விதிகளின் அடிப்படையில் ஜனநாயகம் பேணிப்பாதுகாக்கப்பட வேண்டும்.

நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைகொடுத்து வாங்கக் கூடாது. பதவி அல்லது பணம் கொடுத்து வாங்கக்கூடாது.

இவ்விதமான சில கொள்கைகளின் அடிப்படையிலேயே இந்த முடிவை எடுத்துள்ளோம்.

பதவியில் உள்ள பிரதமரை நீக்குவதற்கு ஜனாதிபதிக்கு அரசியலமைப்பில் அதிகாரம் இல்லை. பதவியில் உள்ள பிரதமர் சட்டபூர்வமாக நீக்கப்படாமல் இருந்தால் அவருக்கு பதிலாக இன்னுமொரு பிரதமர் நியமிக்கப்பட முடியாது.

ஒரு நாட்டில் இரண்டு பிரதமர்கள் இருக்க முடியாது. இதுதான் அடிப்படையாகும். கொள்கையின் அடிப்படையில் இந்த முடிவை எடுத்திருக்கின்றோம்”

மஹிந்தவுடன் பேசியது என்ன?

“அவர் என்னை சந்திக்கவேண்டும் என்று ஒரு அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி சந்தித்தேன். எம்முடைய ஆதரவை தனக்கு தருமாறு அவர் கோரினார். நான் அது தொடர்பில் முடிவெடுக்க முடியாது என்று கூறினேன்.”

நம்பிக்கை வாக்கெடுப்பில் மஹிந்த வெற்றிபெற்றால் என்னவாகும்?

“எம்மை பொறுத்தவரை எமது மக்களின் பாதுகாப்பு உரிமைகளை பேணுவதற்காக நாங்கள் எந்த சிங்கள தலைவர்களுடனும் பேசுவோம்.

யார் பிரதமராக வந்தாலும் அவர்களுடனும் அவர்களுடைய அரசாங்கத்துடனும் பேச்சு நடத்துவோம். அதற்கு மேலதிகமாக நான் எதனையும் கூற முடியாது.”

ஜனாதிபதி தலைமையிலான தீபாவளி நிகழ்வில் நடந்தது என்ன?

“நான் சொல்ல வேண்டியதை திடமாக உறுதியாக சொன்னேன். இந்த மாற்றங்கள் நடைபெற்ற பின்னர் ஜனாதிபதியை முதல் முதலாக சந்தித்தேன். அவருக்கு முன்பதாக என்னை பேசுமாறு கூறினார்கள். அப்போது அவரிடமிருந்து சில பதில்களை பெறுவதற்காக சொல்லவேண்டிய விடயங்களை கூறினேன்.”

நாடாளுமன்ற தேர்தல் ஒன்றுக்கு செல்ல வேண்டுமா?

“அதனைப்பற்றி நாங்கள் முடிவெடுக்கவில்லை. நான்கரை வருடங்களுக்கு முன்னர் நாடாளுமன்றம் கலைக்கப்படவேண்டும் என்றால் 150 எம்.பி க்கள் கைச்சாத்திட்டு யோசனை வரவேண்டும். அது தொடர்பில் நாங்கள் முடிவெடுக்கவில்லை. உரிய நேரத்தில் பரிசீலித்து முடிவெடுப்போம்.”

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net