மைத்திரியை மனநல பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்!

மைத்திரியை மனநல பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை மனநல பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான முஜிபூர் ரஹ்மான் தெரிவித்தார்.

மேலும், 14 ஆம் திகதி கூடும் நாடாளுமன்றில் மைத்திரி- மஹிந்த தரப்பினர் பெரும்பான்மையைக் காண்பித்தால் இந்தப் போராட்டத்தை கைவிடத் தயார் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

கொழும்பில், இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின்போது 14 ஆம் திகதி நாடாளுமன்றம் கூடும்போதான நிகழ்ச்சி நிரல் தொடர்பிலேயே விசேடமாக கலந்துரையாடப்பட்டது.

இதில் கலந்து கொண்ட கட்சித்தலைவர்கள் அனைவரும், நாட்டில் ஏற்பட்டுள்ள சர்ச்சை தொடர்பிலேயே கருத்து வெளியிட்டிருந்தனர்.

அதாவது, இதற்குத் தீர்வினை முன்வைக்கும்வகையில் 14 ஆம் திகதி மஹிந்த ராஜபக்ஷ தனக்கான பெரும்பான்மையைக் காண்பிக்க வேண்டும் என்றும் அதற்கு இணங்க செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றுமே கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியிருந்தனர்.

ஆனால், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் வருகைத் தந்திருந்த கட்சித் தலைவர்கள் அனைவரும் இதற்கு கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டார்கள். இவர்களின் செயற்பாடு ஜனநாயகத்துக்கு முற்றிலும் முரணான ஒன்றாகும்.

113 பேரை இவர்களால் இன்னும் ஏன் பெற்றுக்கொள்ள முடியாதுள்ளது என்பதை நாம் இவர்களிடம் கேட்க வேண்டும். உண்மையில் இந்தக் காரணத்தினால்தான் நாடாளுமன்றைக் கூட்டக்கூட இந்தத் தரப்பினர் அஞ்சுகிறார்கள்.

முடிந்தால் 14 ஆம் திகதி நாடாளுமன்றம் கூடும்போது 113 உறுப்பினர்களின் ஆதரவைக் காண்பியுங்கள். அதைவிடுத்து, அரசமைப்புக்கு முரணாக செயற்பட வேண்டாம் என நாம் கேட்டுக்கொள்கிறோம்.

சபாநாயகருக்கும் இந்தத் தரப்பினர் எச்சரிக்கை விடுக்கிறார்கள். தாம் சொல்வதுபோல செயற்படுமாறு அவர்கள் சபாநாயகருக்கு எச்சரிக்கிறார்கள். 113-ஐ காண்பித்தால் நாம் இந்த போராட்டத்திலிருந்து வெளியேறத் தயாராகவே இருக்கிறோம்.

தமக்கு பெரும்பான்மை இல்லாத காரணத்தினால்தான் தமிழ்- முஸ்லிம் பிரதிநிதிகளிடம் ஜனாதிபதி தற்போது கெஞ்சிக்கொண்டிருக்கிறார்.

இவற்றைப் பார்க்கும்போது அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டுவிட்டதோ எனும் சந்தேகமும் அனைவரிடத்தில் ஏற்பட்டுள்ளது. காலையில் ஒரு கதையும் பகலில் ஒரு கதையும் இரவில் ஒரு கதையும் அவர் கூறிக்கொண்டிருக்கிறார்.

சாதாரண ஒரு கிராம சேவகர் கூட செயற்படாத வகையில்தான் ஜனாதிபதி செயற்பட்டு வருகிறார்.

எனவே, அவரது குடும்பத்தினர் அவரை மனநல வைத்தியசாலைக்கு அழைத்துச்சென்று பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என நாம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். இல்லாவிட்டால் இந்த நாடு இன்னும் பாதிக்கப்பட்டுவிடும்.” என கூறினார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net