#MeToo விவகாரத்தால் அவுஸ்ரேலிய எதிர்க்கட்சித்தலைவர் இராஜினாமா!
#MeToo குற்றச்சாட்டைத் தொடர்ந்து, அவுஸ்ரேலிய எதிர்க்கட்சித் தலைவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த லூக் ஃபொலியின் மீது அவுஸ்ரேலியாவின் ஊடகமொன்றில் பணியாற்றும் பெண் பத்திரிகையாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
இந்நிலையில், குறித்த குற்றச்சாட்டை லூக் ஃபொலி மறுத்த போதிலும் தனது பதவியை இன்று (வியாழக்கிழமை) இராஜினாமா செய்துள்ளார்.
எதிர்வரும் நான்கு மாதங்களின் பின்னர் இடம்பெறவிருக்கும் மாநிலத் தலைவர்களைத் தேர்வு செய்யும் தேர்தலில் வெற்றியை அடையும் நோக்கிலேயே தான் பதவியைத் துறந்துள்ளதாக லூக் ஃபொலி தெரிவித்துள்ளார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு சிட்னியில் இடம்பெற்ற கிறிஸ்மஸ் விழாவில் கலந்துகொண்ட ஃபொலி தன்னிடம் பிழையான முறையில் நடந்து கொண்டதாக பாதிக்கப்பட்ட பெண் பத்திரிகையாளர் பதிவிட்டிருந்தார்.
மேலும், குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்து சட்டரீதியாக தீர்வுகாணவுள்ளதாக லூக் ஃபொலி இன்று செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.