ஈழத்தமிழரின் ஆணையை மீறிய ஜனாதிபதி மைத்திரி!

ஈழத்தமிழரின் ஆணையை மீறிய ஜனாதிபதி மைத்திரி!

இலங்கை அரசியல் களம், நாளுக்கு நாள் புதுப்புது அதிரடி நிகழ்வுகள் மூலம் சூடுபிடித்துக் கொண்டே போக்கின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் திடீர் மஹிந்தவாத ஆதரவும், நாடாளுமன்ற ஒத்திவைப்பும் உள்நாட்டில் மட்டுமல்ல சர்வதேச அரங்கிலும் பல அதிர்வுகளை ஏற்படுத்தி வருகின்றது.

ராஜபக்ஷ குடும்பத்தினால் சட்டத்திற்கு முரணாக இடம்பெறும் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்து ஜனநாயகத்தையும், ஊடக சுதந்திரத்தை பாதுகாக்க ஆட்சி மாற்றம் ஏற்படுத்த வேண்டும் எனக் கூறிக்கொண்டு, பொது வேட்பாளராக களமிறங்கி ஜனாதிபதியாக தெரிவாகிய மைத்திரிபால சிறிசேன இன்று, தானே சட்டத்திற்கு முரணாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்.

ஸ்ரீலங்க சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து நல்லாட்சியினை நிறுவிய காலப்பகுதியில் சகல மக்களினாலும் நம்பப்பட்ட ஜனாதிபதி மைத்திரி, அம்மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை மீறியது மட்டுமல்லாது, அம்மக்களுக்கு நம்பிக்கைத் துரோகமும் இழைத்துள்ளார்.

ஆட்சி மாற்றம் வேண்டி தமது ஆதரவுகளை வழங்கிய சிறுபான்மை சமூகத்தினர் தமக்கு நன்மை கிடைக்கும் என்று நம்பினர். ஆனாலும் நன்மை பெற்றது என்னமோ தென்னிலங்கை அரசியல் சக்திகள் தான்.

உண்மையில் இன்றைய இந்த ஆட்சி கவிழ்ப்புக்கு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை தான் காரணம். தனக்குள்ள அதிகாரத்தைக் கொண்டு எதுவும் செய்யலாம் என்ற நினைப்பில் ஜனாதிபதி மைத்திரிபால, ரணிலை பிரதமர் பதவியிலிருந்து தூக்கி எறிந்துவிட்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை பிரதமராக்கியிருக்கிறார்.

அதிலும் நிறைவேற்று ஜனாதிபதி முறை தான் நாட்டின் ஜனநாயகத்திற்கு குந்தகம் ஏற்படுகின்றது, ஆகவே நிறைவேற்று ஜனாதிபதி முறையினை ஒழிக்க வேண்டும் என்று கூறிய இதே ஜனாதிபதி மைத்திரிபால தான் அதி உச்சமாக நிறைவேற்று ஜனாதிபதி முறைக்குரிய அதிகாரங்களை பயன்படுத்துள்ளார்.

2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தினையடுத்து, 2004 ஆம் ஆண்டு ரணிலுக்கு ஏற்பட்ட அனுபவித்தினைக் கொண்டு, அரசியலமைப்பில் 19 வது திருத்தினைக் கொண்டு, நாடாளுமன்றத்தினைக் கலைக்கும் ஜனாதிபதியின் கால எல்லையினை ரணில் தரப்பினர் மாற்றியமைத்திருந்தனர்.

அதாவது அரசியலமைப்பின் 19 வது திருத்தத்தின் பிரகாரம், ஜனாதிபதி பிரதமரையோ அல்லது நாடாளுமன்றத்தையோ புதிய நாடாளுமன்றம் தொடங்கி நான்கு அரை வருடங்களுக்கு கலைக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரதமர் பதவியானது, இறப்பு, இராஜினாமா மற்றும் அவருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் வெற்றி பெற்றால் மட்டும் வெறிதாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சட்டம் தெளிவாக இருக்கும் பட்சத்தில் ரணிலுடன் வேலை செய்ய முடியாது என்ற நொட்டிச்சாட்டில் அவருடைய பிரதமர் பதவியினை, ஜனாதிபதி மாற்றியுள்ளார். அரசியல் செயற்பாடுகளுக்கு அப்பால் இது முற்றிலும் நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால செய்த துரோகமாகவே பார்க்கப்படுகி;ன்றது.

அரசியலமைப்பில் என்ன சட்டச்சிக்கல் இருந்தாலும், யாரைத் தோற்கடிக்க வேண்டும், யாரை ஆட்சியிலிருநது அகற்ற வேண்டும் எனக் கூறி வந்த ஜனாதிபதி, அந்த நபரையே அதாவது மஹிந்தரையே, ஆட்சிக்கு கொண்டுவந்துள்ளமையாது மைத்திரியின் அரசியல் அனுபவத்திற்கும், அறிவிற்கும் ஏற்புடையதல்ல.

இதேவேளை தனது நிறைவேற்று அதிகாரத்தினைப் பயன்படுத்தி நாடாளுமன்றத்தினை ஒத்திவைத்துக் கொண்டுள்ள மைத்திரிபால, அரசியல் ரீதியான ஆதாயங்களைப் பெற்றுக் கொள்வதற்கு மஹிந்த தரப்பிற்கு உதவி வருகின்றார். இது ஒட்டுமொத்த மக்களின் ஜனநாயகத்தினையும் மீறும் செயலாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த புத்திஜீவிகளும், ஊடகங்களும், வெளிநாட்டு தூதுவர்களும், துறைசார் நிபுணர்களும், இலங்கையில் ஏற்படுத்தப்பட்ட ஆட்சி மாற்றம் அரசியலமைப்பிற்கும், மக்கள் ஆணைக்கும் விரோதமானது என தெரிவித்துவருகின்றனர்.

யார் என்ன சொன்னாலும் எனக்கென்ன, தான் எடுத்த முடிவு சரி என்று ஒற்றைக்காலில் நிற்கும் ஜனாதிபதியி;ன் நடவடிக்கை சர்வதேச அரங்கில் அவருக்குரித்தான மதிப்பையும் மரியாதையையும் இழக்கச் செய்வதுடன், இலங்கையருக்குக் கிடைக்க வேண்டிய சர்வதேச சலுகைகளையும் தடுக்கக்கூடியது.

இவ்வாறு ஜனாதிபதியினால் ஏற்படுத்தப்பட்டுள்ள அரசியல் கலவரமாகது நாட்டு மக்களை மேலும் சிக்கலுக்குள் தள்ளிவிட்டுள்ளது.

நிர்வாக சேவைகள் முடங்கிப் போயுள்ளன. வெளிநாட்டு முதலீடுகள் தடைப்பட்டுள்ளன, வெளிநாட்டு சுற்றுலாப்; பயணிகளின் வருகை குறைவடைந்துள்ளது என பல பிரச்சனைகள் தலை தூக்கியுள்ளன.

ஈழத்தமிழரைப் பொறுத்தமட்டில் காலம் காலமாக தென்னிலங்கையினால் ஏமாற்றப்பட்டு வருகின்றனர். அதன் பண்புகளை மாற்றலாம் என 2015 நம்பிய போதிலும் 2018 இல் தென்னிலங்கையின் மனப்பாங்கு மாறவில்லை என்ற விடயம் உறுதியாகியுள்ளது. புதிய அரசியலமைப்பின் உருவாக்கத்திற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற நிலையில் இனி அது தூக்கி எறியப்படப்போகிறது.

போர்குற்றங்களுக்கும், காணாமல் போனோருக்கும், அரசியல் கைதிகளின் விடயத்திற்கும், மனித உரிமை மீறல்களுக்கும் உரிய தீர்வு மற்றும் நிவாரணம் கிடைக்கும் எனத் தெரிவித்த நல்லாட்சி இன்று இரண்டாகப் பிளபட்டு முட்டிமோதிக்கிடக்கின்றது.

ஈழத்தமிழ் மக்களின் வாக்குகளில் ஆட்சிப்பீடம் ஏறிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செய்திருக்கும் காரியமானது ராஜபக்ஷக்கள் செய்த அநியாயத்திலும் அநியாயமானது.

இவ்வாறு எல்லாம் செய்துவிட்டு கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவரையும் விலைபேசி தம்பக்கம் இழுத்துக் கொண்டுள்ளனர் மைத்திரி மஹிந்த கூட்டணி. இதுபோக தமக்கு ஆதரவு வழங்காவிட்டாலும் பரவாயில்லை ரணிலுக்கு ஆதரவு வழங்காமல் நடுநிலை வகிக்குமாறு கூட்டமைப்பை ஜனாதிபதி கோரியுள்ளார்.

இனியும் தமிழ் மக்கள் ஜனாதிபதி மைத்திரியை, நம்பத்தயாரில் என்ற போக்கில் கூட்டமைப்பு ரணிலுக்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளது.

ஏற்கனவே நாடு ராஜபக்ஷக்களிhல் ஏற்படுத்தப்பட்ட கடன் சுமையினால் தள்ளாடிக் கொண்டிருக்க, ஜனாதிபதியின் ஜனநாயக விரோத நடவடிக்கை மேலும் நாட்டின் பொருளாதாரத்தை வீழ்ச்சியடைச் செய்யும் என்பதில் ஐயமில்லை.

ஆக நாட்டு மக்களுக்கு எத்தகைய இழப்பு வந்தால் என்ன, தமக்கு அரசியல் அதிகாரமும், ஆட்சிப்பலமும், பணமும் சொகுசு வாழ்வும் இருந்தால் போதும்; என்ற சிந்தனையுடன் தென்னிலங்கை அரசியல்வாதிகள் இருக்கும் வரை, இலங்கையரை கடவுளால் கூட காப்பாற்ற முடியாத நிலை ஏற்படும்.

ஈழப் போராட்டம் ஆயுத ரீதியாக இருந்த போது இனவிரோத கருத்துக்களைத் தூவி ஆட்சி அதிகாரத்தை பிடித்துக் கொண்ட தென்னிலங்கை சக்திகள் இன்று தமக்குள்ளே சண்டை போட்டுக் கொண்டு குத்துக்கரணம் அடிக்கிறார்கள்.

ஆகவே இந்த சந்தர்ப்பங்களை சர்வதேச மட்டத்தில் இராஜதந்திர ரீதியாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் அணுகி தமிழ் மக்களுக்கான உரிய தீர்வுகளையும், இழப்பீடுகளையும் பெற்றுக் கொள்ள முயல வேண்டும்.

வெறுமனே தமிழ் மக்களின் வாக்குகளினால் தென்னிலங்கை அரசியல்வாதிகள் நன்மை பெறுவதற்கு அப்பால் தமிழ் மக்களுக்கு சமாந்திரமாக நன்மை பெறும் அரசியல் மற்றும் பொருளாதார நகர்வுகளை கூட்டமைப்பினர் மேற்கொள்ள வேண்டும் என்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு.

பா.யூட்

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net