சபாநாயகரின் திடீர் மாற்றத்திற்கான காரணம்!
சபாநாயகர் கரு ஜயசூரியவின் திடீர் மாற்றத்திற்கான காரணம் குறித்து ஆராய்ந்து வருவதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், உறுப்பினர்கள் மத்தியில் அவருக்கிருந்த நற்பெயர் இல்லாமல் போய்விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
கண்டியில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதுகுறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்-
”சபாநாயகரின் செயற்பாடுகள் குறித்து நாம் கவலையடைகிறோம். கடந்த காலங்களில் அவர் மீது மரியாதை இருந்தது. அவர் உறுப்பினர்கள் மத்தியில் நற்பெயரைக் கொண்டிருந்தார்.
தற்போது அவை அனைத்தையும் இல்லாமல் ஆக்கிவிட்டார். அன்று இருந்த சபாநாயகரா இவர் என்ற சந்தேகம் எழுகின்றது.
முன்னர் நான் உட்பட எங்கள் குழுவினரைச் சந்தித்த சபாநாயகர், தற்போதைய அரசியல் செயற்பாடுகள் அரசியலமைப்பிற்கு உட்பட்டது, ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலை ஏற்றுக் கொள்கிறோம், பிரதமரை அங்கீகரிக்கிறோம், அவருக்கான சிறப்புரிமைகள் வழங்கப்படும் என்று கூறினார். ஆனால் இன்று அப்படியே மாறிவிட்டார்.
ஒருவரால் அவ்வாறு உடனடியாக மாறமுடியுமா என்று எனக்கு தெரியாது. அவரது மாற்றத்திற்கான காரணம் குறித்து பல கருத்துக்கள் பரவுகின்றன.
அவரது வயோதிபம் காரணமாக சிந்திப்பதில் பிரச்சினை இருக்கிறதா? இல்லை வேறு அழுத்தங்களா? அச்சுறுத்தலா? இல்லை வேறு காரணமா? இதனை நாம் ஆராய்கின்றோம்.
எவ்வாறாயினும் ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகாத்தை யாரும் கேள்விக்குட்படுத்த முடியாது” என்றார்.
இதேவேளை, கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், ஜனாதிபதி மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
எனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை உடனடியாக மனநல மருத்துவமனையில் அனுமதிக்குமாறும், இல்லையென்றால் நாடு பாரிய ஆபத்தினைச் சந்திக்கும் என்றும் அவர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.