சர்வதேசத்தை பகைத்துக்கொண்டு முன்னோக்கி செல்ல முடியாது!
சர்வதேசத்தை பகைத்துக்கொண்டு இலங்கை ஒருபோதும் முன்னோக்கி பயணிக்க முடியாது என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய அரசியல் நிலைதொடர்பில் மலையக மக்களுக்கு தெளிவுபடுத்தும் கூட்டம் ஒன்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ளது.
ஹட்டன் டீ.கே.டபிள்யூ மண்டபத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) குறித்த கூட்டம் இடம்பெற்றுள்ளது.
இந்தநிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“இன்று இந்த நாட்டில் அரசியலில் ஜனநாயகத்திற்கு விரோதமான பல செயல்பாடுகள் நடைபெற்று வருகின்றது. அந்த அனைத்து செயல்பாடுகளையும் மலையக மக்களாகிய நாங்கள் முழுமையாக எதிர்ப்பு தெரிவிக்கின்றோம்.
2015ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அன்று ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேனவிற்கும் பிரதமராக ரணில் விக்ரமசிங்கவிற்கும் அவர் தலைமையிலான ஒரு அரசாங்கத்தை முன்னெடுப்பதற்கும் மலையக மக்கள் தங்களுடைய வாக்குகளை வழங்கினார்கள். ஆனால் இன்று அந்த வாக்குகளுக்கு விரோதமான செயல்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றது.
எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் ஜனாதிபதியோ அல்லது பிரதமரோ தனித்தனியாக முடிவுகளை எடுக்க முடியாது. அதற்காக மக்கள் தங்களுடைய வாக்குகளை வழங்கவில்லை. அவர்கள் இருவரும் இணைந்து இந்த நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என்பதற்காகவே அவர்களுக்கு மலையக மக்கள் ஒற்றுமையாக வாக்களித்தார்கள்.
இன்று அந்த மக்கள் அளித்த வாக்குகளுக்கு எதிராக ஜனாதிபதி செயல்படுகின்றார். இந்த மக்கள் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் இவர்கள் இருவரும் தனித்தனியே பிரிந்து சென்று அரசாங்கத்தை முன்னெடுப்பதற்கு அல்லது அரசாங்கத்தில் ஏற்படுகின்ற பிரச்சினைகளை தீர்ப்பதற்காக இன்னுமொரு புதிய பிரதமராக நியமிப்பதற்கு மக்கள் தங்களுடைய ஆணை வழங்கவில்லை.
எனவே அன்று கூறியதை போல எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் அவற்றை பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்த்துக்கொண்டு இந்த நல்லாட்சி அரசாங்கத்தை முன்கொண்டு செல்ல வேண்டும் என்பதை இந்த ஜனாதிபதி மறந்து செயல்படுவது எங்களுக்கு மிகவும் கவலையளிக்கின்றது.
ஒரு நாட்டின் பொறுப்புள்ள தலைவராக அவர் எடுக்கின்ற முடிவுகள் இன்று எத்தனை பாதிப்புகளை நமக்கு ஏற்படுத்தி இருக்கிறது. சர்வதேச ரீதியாக எங்களுடைய நாடு பல பின்னடைவுகளை சந்தித்திருக்கின்றது. பல மேற்குலக நாடுகள் எங்களுடைய இந்த செயல்பாடுகளைப் பார்த்து தாங்கள் செய்ய முன்வந்த உதவிகளை கூட நிறுத்தி வைத்திருக்கிறன.
சர்வதேசத்தை பகைத்துக்கொண்டு இலங்கை ஒருபோதும் முன்னோக்கி பயணிக்க முடியாது என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்“ என தெரிவித்துள்ளார்.