ரணிலை பழிவாங்கவே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது!

ரணிலை பழிவாங்கவே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது!

பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் போன நிலையில், ஐ.தே.க. தலைவர் ரணில் விக்ரமசிங்கவை பழிவாங்கவே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதென ஐ.தே.க.வின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா குற்றஞ்சாட்டியுள்ளார்.

அலரி மாளிகையில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இக்குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

நாட்டில் கடந்த மாதம் 26ஆம் திகதி அரசியலமைப்புக்கு முரணான ஒரு பாரதூரமான செயற்பாடொன்று மேற்கொள்ளப்பட்டதென குறிப்பிட்ட அவர், ஜனாதிபதியால் பெரும்பான்மையான ஆதரவினைப் பெற்றுக்கொள்ள முடியாது போன காரணத்தினாலேயே நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கலைத்துள்ளாரென குற்றஞ்சாட்டியுள்ளார்.

14ஆம் திகதி நாடாளுமன்றில் தனக்கு ஏற்படவிருந்த அவமானத்தை மறைத்துக்கொள்ளவே ஜனாதிபதி இந்தச் செயற்பாட்டை முன்னெடுத்துள்ளாரென அவர் மேலும் கூறியுள்ளார்.

அரசமைப்புக்கு முரணாக இரண்டாவது தடவையாகவும் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்தச் செயற்பாட்டுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மட்டுமன்றி, மஹிந்த ராஜபக்ஷவும் பொறுப்புக்கூற வேண்டுமென அஜித் பி பெரேரா சுட்டிக்காட்டினார்.

மேலும், வரவு- செலவு திட்டம் கொண்டுவரப்படாமல், தேர்தலுக்கு நிதியொதுக்கீடு செய்யப்படாமல், தேர்தல் ஆணைக்குழுவும் தேர்தல் செயற்பாடுகளுக்கு தயாராக இல்லாத நிலையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளமையானது நாட்டில் பாரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதென அவர் மேலும் குறிப்பிட்டார்.

அந்தவகையில் இது முற்றிலும் ரணில் விக்ரமசிங்கவை பழிவாங்க மேற்கொள்ளப்பட்ட செயற்பாமென குறிப்பிட்ட அஜித் பி பெரேரா, தேர்தலுக்கு முகங்கொடுக்க தயாராகவே உள்ளோம் என தெரிவித்தார். ஆனால், எப்போது வேண்டுமானாலும் தேர்தலை நடத்துவது என்பது ஜனநாயகம் அல்லவென்றும் குறிப்பிட்டார்.

இதேவேளை, 19ஆவது திருத்தச்சட்டத்தின் ஊடாக தனக்கு அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளமையை அறியாது ஜனாதிபதி செயற்படுவதன் விளைவாகவே இந்த சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன என்றும் கூறியுள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net