தடுமாற்றத்திலும் நெருக்கடியிலும் மைத்திரி தலைமையிலான சுதந்திரக்கட்சியினர்!

தடுமாற்றத்திலும் நெருக்கடியிலும் மைத்திரி தலைமையிலான சுதந்திரக்கட்சியினர்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலை அறிவித்துள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பெரும் நெருக்கடியை எதிர்நோக்கி வருவதாக அந்த கட்சியின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொதுத் தேர்தலில் மகிந்த ராஜபக்ச தரப்பு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தாமரை மொட்டுச் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என அந்த தரப்பின் மக்கள் பிரதிநிதிகள், தொழிற்சங்கங்கள், இணை அமைப்புகள் என அனைவரும் யோசனை முன்வைத்துள்ளனர்.

இந்த சூழ்நிலையில், மகிந்த ராஜபக்ச உட்பட 50க்கும் மேற்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்கள் அந்த கட்சியில் இருந்து விலகி, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இணைந்துள்ளனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தாமரை சின்னம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்திருப்பது மற்றும் கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பெற்ற வெற்றி என்பவற்றை அடிப்படையாக கொண்டு பொதுத் தேர்தலில் தாமரை மொட்டுச் சின்னத்தில் போட்டியிடுவது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உட்பட ஏனைய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடும் தீர்மானத்தில் இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகரான பசில் ராஜபக்சவுக்கு நெருக்கமான தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.

அதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி , ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கீழ் போட்டியிடும் என சுதந்திரக்கட்சியின் செயலாளர் ரோஹன லக்ஷ்மன் பியதாச கூறியிருந்தார்.

எவ்வாறாயினும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கீழ் மட்டத்தில் தேர்தல் பணிகளை ஆரம்பித்துள்ளது.

இதனிடையே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தாமரை மொட்டுச் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற யோசனைக்கு அந்த கட்சியின் ஒரு அணியினர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

குறிப்பாக நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்கவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளித்து அவருடன் இருந்த துமிந்த திஸாநாயக்க, மகிந்த அமரவீர, விஜித் விஜயமுனி சொய்சா, ஏ.எச்.எம்.பௌசி, லசந்த அழகியவண்ண, பியசேன கமகே, ரஞ்சித் சியம்பலாப்பிட்டியே ஆகியோர் இது குறித்து ஜனாதிபதிக்கு தெளிவுப்படுத்தியுள்ளனர்.

கடந்த காலங்களில் ராஜபக்சவினரை கடுமையாக விமர்சித்து வந்ததால், அவர்களுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட்டால், தேர்தலில் தமது அணியை தோற்கடிக்கும் திட்டங்கள் முன்னெடுக்கப்படலாம் என இவர்கள் ஜனாதிபதியிடம் கூறியுள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கி 100 நாள் அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருந்த எஸ்.பி.திஸாநாயக்க, விஜித் விஜயமுனி சொய்சா, டிலான் பெரேரா, பியசேன கமகே, வசந்த பண்டார உட்பட பலரை மகிந்த தரப்பினர் கடந்த 2015ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தோற்கடித்தனர்.

இந்த நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் இந்த அணியினர் நேற்று பிரதமர் மகிந்த ராஜபக்சவை சந்தித்து இது சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்தியதுடன் அவர்களின் அரசியல் எதிர்காலத்திற்கு எந்த பிரச்சினையும் ஏற்படாது என உறுதி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எது எப்படி இருந்த போதிலும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினர் இதுவரை எந்த முடிவுகளையும் எடுக்கவில்லை. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் பலர் ஜனாதிபதியை கடுமையாக விமர்சித்து வருவதாகவும் பேசப்படுகிறது.

கடந்த 8ஆம் திகதி நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அகில இலங்கை செயற்குழுக் கூட்டத்தில் நாடாளுமன்றத்தை கலைக்க போவதில்லை என உறுதியளித்திருந்த ஜனாதிபதி மறுநாள் நள்ளிரவு நாடாளுமன்றத்தை கலைத்தமை சம்பந்தமாக அவர்கள் நேரடியாக ஜனாதிபதி மீது குற்றம் சுமத்தி வருகின்றனர்.

அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பலர் தாமரை மொட்டுச் சின்னத்தில் போட்டியிட முடியாது என மறுத்துள்ளனர்.

இவ்வாறான சூழலில் ஜனாதிபதியுடன் இருக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அணியினர் பெரும் தடுமாற்றத்தை எதிர்நோக்கி வருகின்றனர். இதனால், தமது அரசியல் எதிர்காலத்தை பாதுகாக்க பலவேறு தீர்மானங்களை எடுக்க நேரிடும் எனவும் கூறியுள்ளனர்.

Copyright © 1951 Mukadu · All rights reserved · designed by Speed IT net