நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய தீர்மானம்!

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய தீர்மானம்!

நாட்டின் அரசியலமைப்பை மீறி நாடாளுமன்றத்தை உரிய காலத்துக்கு முன்னதாக ஜனாதிபதி கலைத்துள்ளமைக்கு எதிராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய தீர்மானித்துள்ளது.

கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐவரும் புனித மக்காவிலிருந்து நாடு திரும்பியவுடன் இந்த வழக்குத்தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும், கட்சியின் நாடாளுமன்றக்குழு புனித மக்காவில் கூடி இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

‘அரசியலமைப்பை தமக்கேற்றால் போன்று ஜனாதிபதி கையிலெடுத்து சட்டத்துக்கு முரணான முறையில், தாம் விரும்பியவாறு நாடாளுமன்றத்தை கலைத்திருப்பதை எமது கட்சி வன்மையாகக் கண்டிக்கின்றது.

மேலும் நாட்டின் மீயுயர் சட்டமான அரசியலமைப்பில் நடைமுறையில் இருக்கும் நாடாளுமன்றம் 4 1/2 வருடங்களுக்கு முன்னதாக கலைக்கப்படக் கூடாதென தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கு மாறாக ஜனாதிபதியின் செயற்பாடு அமைந்திருப்பது, ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கியுள்ளதுடன், அரசியலமைப்புச் சட்டத்தை கேலிக்குரியதாகவும் மாற்றியுள்ளது.

எந்தத் தேர்தல்களுக்கும் முகங்கொடுக்க எமது கட்சி தயாராகவே உள்ளது. தேர்தலுக்கு அஞ்சி நாம் நீதிமன்றம் செல்லவில்லை.

இவ்வாறான ஜனநாயகவிரோத நடவடிக்கைகளை நாங்கள் அனுமதித்தோமேயானால் எதிர் காலத்திலும் ஜனாதிபதி நாடாளுமன்றத்தை தமது விருப்பத்திற்கேற்ப எந்த வேளையிலும் கலைக்க முடியும் என்ற நிலை வந்து விடும்.

எனவே இவ்வாறன செயற்பாடுகள் எதிர்காலத்திலும் இடம்பெறாமல் இருப்பதற்காகவே நாங்கள் நீதிமன்றத்தை நாடவுள்ளோம்’ என தெரிவித்துள்ளார்

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net