பிரதமர் வேட்பாளராக சஜித்? மைத்திரி – மகிந்தவுக்கு எதிராக ஐ.தே.க வியூகம்!
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலின் போது ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் பிரதமர் வேட்பாளராக முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாசவை நிறுத்துவது குறித்து ஆராயப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் அதன் பங்காளிக் கட்சிகள் சிலவற்றின் தலைவர்கள் இது குறித்து நேற்று இரவு விரிவாக ஆராய்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை தொடர்ந்து எதிர்வரும் ஜனவரி ஐந்தாம் திகதி பொது தேர்தல் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மைத்திரி – மகிந்த கூட்டணியை நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்கொள்வதற்கு ஐக்கிய தேசிய முன்னணி பரந்துபட்ட கூட்டணி ஒன்றை அமைத்துப் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், இந்த புதிய கூட்டணி, புதிய சின்னத்தில் போட்டியிடுவதற்கு ஐக்கிய தேசிய முன்னணி திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் பிரதமர் வேட்பாளராக முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாசவை நிறுத்துவது குறித்து இதன் போது ஆரயாப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இதேவேளை, எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளராக ரணில் விக்ரமசிங்கவின் மனைவியை நிறுத்த மூத்த உறுப்பினர்கள் சிலர் ரணிலுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.