மைத்திரிக்கு எதிராக நீதிமன்றம் மாறுமா?
சர்வதேச அரசியல் அரங்கில் தற்போது சமகால இலங்கை அரசியல் களம் பேசுபொருளாக மாறியுள்ளது, பல வல்லரசு நாடுகள், இராஜதந்திரிகள், மனித உரிமை அமைப்புக்கள் என பலரும் எந்நேரமும் இலங்கையையே உற்றுநோக்கும்படியான பல அதிரடி மாற்றங்கள் கடந்த இரண்டரை வார காலமாக இலங்கையில் நடந்து கொண்டிருக்கின்றன.
கடந்த மாதம் 26ஆம் திகதி மாலை வேளை, யாரும் எதிர்பாராத ஒரு தருணத்தில் இலங்கை மக்களுக்கு பெரிய மாற்றம் ஒன்றும் அரசியல்வாதிகள் பலருக்கு அதிர்ச்சியும் காத்திருந்தது.
இவை அனைத்திற்கும் உரித்துடையவர்கள் மூவர், எமது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் இன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச.
இதன்படி கடந்த 26ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் புதிய பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டார், முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டார், நடாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது, அமைச்சரவை கலைக்கப்பட்டது, புதிய அமைச்சர்கள் பதவி ஏற்கலானார்கள், ஆங்காங்கே சில கட்சித்தாவல்கள், கோடிக்கணக்கில் பணப்பறிமாற்றங்கள், மக்கள் கூட்டங்கள் என விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது அரசியல் களம்.
இவை அனைத்திற்கும் இடையில் சர்வதேச நாடுகள் அமெரிக்கா முதல், பிரித்தானியா, இந்தியா என பல நாடுகள் இலங்கைக்கு அறிவுறுத்தல்களையும் எச்சரிக்கைகளையும், ஆலோசனைகள் மற்றும் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வந்த நிலையில் ஐ.நாடுகள் சபை இலங்கையை தொடர்ந்தும் கண்காணித்து வருவதாக எச்சரித்திருந்தது.
அதனைத் தொடர்ந்து, பல அமைச்சுக்களுக்கான புதிய அமைச்சர்கள் தொடர்ந்தும் பதவி ஏற்று வந்த நிலையில், நாடாளுமன்றத்தை உடன் கூட்டுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு தொடர்ச்சியாக கொடுக்கப்பட்டு வந்த அழுத்தங்களின் பிரகாரம் எதிர்வரும் 14ஆம் திகதி நாடாளுமன்றத்தை கூட்டுவதாக விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றின் ஊடாக மைத்திரி அறிவித்திருந்தார்.
அதன் பின்னர் அன்றைய நாடாளுமன்ற அமர்வின்போது ரணில் பிரதிநிதித்துவப்படுத்தும் ஐ.தே.க பெரும்பான்மை பலத்த காட்டப்போகின்றதா அல்லது மைத்திரி மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான சுதந்திரக்கட்சி பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கப் போகின்றதா என்ற போட்டி நிலை தொடர்ந்து வந்ததுடன் நாடாளுமன்றம் கலைக்கப்படுமா என்ற கேள்வி அனைவரது மத்தியிலும் இருந்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் உத்தியோகப்பூர்வமாக நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதுடன் அது பல அதிர்வலைகளையும் தற்போது தோற்றுவித்துள்ளது.
நாடாளுமன்றம் கலைப்பு, அடுத்த தேர்தலுக்கான ஆயத்தங்கள் என தற்போதைய அரசியல் நிலவரம் பதிவாகின்றது.
இது இவ்வாறிருக்க மைத்திரி நாடாளுமன்றத்தை கலைத்தது சட்ட விரோதமானது, யாப்புக்கு முரணானது என பலர் வாதிட்டு வருகின்றனர்.
அதற்கும் மேலாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் சட்டத்தரணியுமான சுமந்திரன் இது தொடர்பில் உச்ச நீதிமன்றை நாடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன், மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவும் உச்சநீதிமன்றை நாடவுள்ளதாக அறிவித்துள்ளார்.
இந்த சூழலில் மைத்திரி நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கான உச்சநீதிமன்றின் முடிவு எவ்வாறு இருக்கப் போகின்றது என்பதே சமகால எதிர்ப்பார்ப்பு.
நாடாளுமன்றை கலைத்தமைக்காக பல தரப்புக்கள் உச்ச நீதிமன்றை நாடினாலும் கூட அதற்கு சாதகமான முடிவு கிடைக்காது என்பது பலரது எண்ணப்பாடாக உள்ளது.
இலங்கை ஜனாதிபதி ஒருவருக்கு நிறைவேற்றதிகாரத்தின் பிரகாரம் ஒரு பெண்ணை ஆணாகவோ, ஆணை பெண்ணாகவோ மாற்றுவதைத் தவிர அனைத்து அதிகாரங்களும் உண்டு.
நடைமுறையிலுள்ள நாடாளுமன்றத்துடன் நாட்டின் செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுக்க முடியாது என ஜனாதிபதி கருதுவாராக இருந்தால் தனக்குள்ள விசேட அதிகாரத்தை பயன்படுத்தி நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியும் என ஜனாதிபதியின் சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அத்துடன், 19ஆவது அரசியலமைப்பு சீர்த்திருத்தத்தில் எந்தவொரு இடத்திலும் ஜனாதிபதிக்குரிய நிறைவேற்று அதிகாரம் குறைக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறெனில் ஜனாதிபதியின் நடவடிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளக்கூடியதற்கான வாய்ப்புக்கள் அதிகம் என்பது எண்ணப்பாடு.
இந்நிலையில், 19ஆவது அரசியலமைப்பு சீர்த்திருத்த குழுவில் அங்கம் வகிக்கக்கூடிய ஜனாதிபதி சட்டத்தரணியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் உச்ச நீதிமன்றத்தை நாடுவது எவ்வாறு சாத்தியப்படும் என்பதே இங்குள்ள கேள்வி.
அத்துடன், இவ்வாறான சிக்கல் நிலைகளும், இக்கட்டான சூழல்களும் உருவாக பலவீனமாக இருப்பது அரசியலமைப்பா? அல்லது உள்ள குறைப்பாடுகளா என்பது விவாதப்பொருளாக இருக்கின்றது.
மேலும், உச்ச நீதிமன்றின் தீர்ப்புக்கமைய தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள தயார் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்திருந்தாலும், அதற்கும் அப்பால் நாடாளுமன்ற தேர்தலுக்கான ஆயத்த நடவடிக்கைகளும் மும்முரமாக நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
இம்மாதம் முதல் வேட்பு மனுத்தாக்கல்கள் ஆரம்பிப்பு, ஜனவரி ஐந்தில் தேர்தல், ஜனவரி 17 நாடாளுமன்றின் முதல் அமர்வு என அடுத்தக்கட்ட நகர்வுகள் சூடுபிடிக்கின்றன.
ஒரு வேளை ஜனாதிபதியின் முடிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கினாலும் கூட மீண்டும் பழைய நாடாளுமன்றத்தை கூட்டி நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல, மைத்திரி எத்தனை சதவீதம் இணங்குவார்? அது சாத்தியப்படுமா என்பது சிந்திக்க வேண்டியது.
எனினும், உச்ச நீதிமன்றின் முடிவு மைத்திரியின் அதிகாரத்திற்கு சார்பானதாகவே அமையும் என்பது அரசியல் ஆய்வாளர்களின் கருத்தாக இருக்கின்றது.
இந்நிலையில், அடுத்தக்கட்ட தேர்தல் பரபரப்புக்கு இலங்கை அரசியல் களம் நகர்வதோடு, இலங்கை மக்களுக்கு அடுத்த தேர்தல் களம் மீண்டும் ஓர் செய்தியை சொல்ல காத்திருக்கின்றது என்பதே நிதர்சனம்.
-எழுத்தாளர் Jeslin –