அவுஸ்ரேலியாவில் ஸ்ட்ரோபெரி பழங்களில் ஊசி – பெண்ணொருவர் கைது!

அவுஸ்ரேலியாவில் ஸ்ட்ரோபெரி பழங்களில் ஊசி – பெண்ணொருவர் கைது!

அவுஸ்ரேலியாவின் குயின்ஸ்லாந்து பகுதியில் ஸ்ட்ரோபெரி பழங்களில் ஊசிகள் இருந்த சம்பவம் தொடர்பாக பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒரு நீண்ட, கடினமான விசாரணைக்கு பின்னர் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த செப்டம்பர் மாதம் ஸ்ட்ரோபெரி பழங்களில் ஊசி இருப்பது கண்டறிப்பட்டமை அவுஸ்ரேலியாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து நாடளாவிய ரீதியாக விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டது.

ஸ்ட்ரோபெரி பழங்களில் ஊசி இருப்பதாக சுமார் 100 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டன. ஆனால் அதில் சில போலியானவை என்பதுடன், சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்துவதற்கும் எழுப்பப்பட்டன.

விவசாயிகள் டன் கணக்கான ஸ்ட்ரோபெர்ரி பழங்களை மண்ணில் புதைக்கும் நிலை ஏற்பட்டது. மேலும் பல்பொருள் அங்காடிகள் ஸ்ட்ரோபெரி விற்பனையை நிறுத்தின.

இதுதொடர்பான, முதல் சம்பவம் குயின்ஸ்லாந்தில் இடம்பெற்றது. ஸ்ட்ரோபெரி பழத்தை உட்கொண்ட முதியவர் ஒருவர் வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனையடுத்து, ஸ்ட்ரோபெரி பழத்தில் ஊசி இருப்பது தொடர்பான அச்சம் முதலில் அவுஸ்ரேலியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பரவியது பிறகு அது நியூசிலாந்திலும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதன் விளைவாக முறையற்ற வகையில் இந்த செயற்பாட்டில் ஈடுபடுவோருக்கு 10 தொடக்கம் 15 வருட சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று அவுஸ்ரேலிய அரசாங்கம் அறிவித்திருந்தது.

இதுகுறித்து கடுமையாக கருத்து வௌியிட்டிருந்த அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் “இது விளையாட்டான விடயம் அல்ல. கடுமையாக உழைக்கும் அவுஸ்ரேலிய மக்களின் வாழ்வை நீங்கள் ஆபத்திற்கு உள்ளாக்குகிறீர்கள், குழந்தைகளை அச்சுறுத்துகிறீர்கள். நீங்கள் ஒரு கோழை” என்று கூறியிருந்தார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net