‘கஜா புயல்’ 15ஆம் திகதிவரை தமிழகத்திற்கு சிவப்பு எச்சரிக்கை!
வங்கக்கடலில் உருவாகியுள்ள “கஜா புயல்“ இன்னும் 2 நாட்களில் வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா இடையே கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன்காரணமாக தமிழகத்திற்கு ‘சிவப்பு எச்சரிக்கை’ விடுக்கப்பட்டுள்ளதுடன் மீனவர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) புயலாக உருமாறிவிட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இந்த புயலுக்கு ‘கஜா’ என பெயரிடப்பட்டுள்ள நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் இந்த புயல் நகரக் கூடுமெனவும் அடுத்த 3 நாட்களில் வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திராவை நோக்கி நகரும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
‘கஜா புயல்’ காரணமாக, இன்று (திங்கள் கிழமை) முதல் தமிழகம் மற்றும் ஆந்திராவின் கடலோர பகுதிகளில் மணிக்கு 90 முதல் 100 கி.மீ வேகத்தில் காற்று வீசுக் கூடும்மென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இம்மாதம் 14ஆம் திகதி மாலை முதல் கனமழை பெய்யக் கூடுஅமனவும், அதே நேரத்தில் வருகின்ற 15ஆம் திகதி ‘கஜா புயல்’ வலுவிழந்து, வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா இடையே கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
‘கஜா புயல்’ காரணமாக வங்கக் கடல் கடும் சீற்றத்துடன் காணப்படும் என்பதால், ஆழ்கடலில் இருக்கும் மீனவர்கள் உடனடியாக கரைதிரும்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் தமிழகத்திற்கு ‘சிவப்பு எச்சரிக்கை’ கொடுக்கப்பட்டுள்ளது. இதில் கடலூர், நாகை, புதுச்சேரி, பாம்பன் துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அனைத்து கடலோர மாவட்டங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தாழ்வான பகுதியில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட உள்ளனர். அத்துடன் கடலுக்கு சென்று மீன் பிடிக்க தடை செய்யப்பட்டுள்ளது.
மறு உத்தரவு வரும்வரை மீன்பிடிக்க தடை தொடரும். புயல் குறித்து அனைத்து மீனவர்களுக்கும் தகவல் தெரிவிக்க பேரிடர் மேலாண்மை துறை சார்பில் சென்னையில் கட்டுப்பாட்டு அறையும் செயற்பட்டு வருகின்றது.