நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக இன்று வழக்குத் தாக்கல்!
இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் இன்று (திங்கட்கிழமை) வழக்குத்தாக்கல் செய்யப்படவுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து குறித்த வழக்கை தாக்கல் செய்யவுள்ளன.
நாடாளுமன்றத்தை கலைத்த ஜனாதிபதியின் செயற்பாடு அரசியலமைப்பிற்கு முரணானதோடு, ஜனநாயக விரோத செயற்பாடு என தெரிவித்துள்ள குறித்த கட்சிகள், அதன் பிரகாரம் இன்று வழக்குத் தாக்கல் செய்யவுள்ளன.
நாட்டின் பிரதமர் நியமனத்தில் ஏற்பட்ட சர்ச்சை நிறைவடையாத நிலையில், நாடாளுமன்றத்தைக் கூட்டவேண்டுமென பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர்.
அதன் பிரகாரம் எதிர்வரும் 14ஆம் திகதி நாடாளுமன்ற தொடரை நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்த போதும், கடந்த 9ஆம் திகதி நாடாளுமன்றை கலைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதி விசேட வர்த்தமானியை வெளியிட்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து ஜனவரி 5ஆம் திகதி பொதுத் தேர்தல் நடத்துவதற்கும் அறிவிக்கப்பட்டது.
எனினும், நாடாளுமன்றில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத காரணத்தினாலேயே அதனை கலைத்ததாக ஐ.தே.க. குற்றஞ்சாட்டி வருகின்றது.
ஆனால், உறுப்பினர்கள் பேரம் பேசப்பட்டமை மற்றும் முன்னாள் சபாநாயகரின் பாரபட்சமான செயற்பாடு ஆகியவையே நாடாளுமன்றை கலைக்க வழிவகுத்ததென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று ஆற்றிய விசேட உரையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.