மைத்திரிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழன்!
கடந்த ஒன்பதாம் திகதி நள்ளிரவில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கான வர்த்தமானி வெளியிடப்பட்ட நிலையில், இந்த நடவடிக்கை நாட்டில் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் இன்றைய தினம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த வரிசையில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல்லும் இடம்பிடித்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று இன்றைய தினம் செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழரான அவர் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவை இன்றைய தினம் தாக்கல் செய்துள்ளதாக தெரியவருகிறது.
இதேவேளை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினரான ரட்ணஜீவன் ஹூல், எந்த அரசியல் கட்சியையும் சாராது இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன், தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய சுயாதீன தேர்தல்கள் ஆணையகத்தின் அதிகாரங்களையும் பொறுப்புகளையும் தேர்தல் ஆணையாளர் நாயகம் எம்.பீ.சி.பெரேரா என்பவரிடம் கையளித்துள்ளார்.
சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களான மகிந்த தேசப்பிரியவும், நளின் அபயசேகரவும் இது தொடர்பான அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தனர்.
எனினும் சுயாதீன தேர்தல் ஆணையகத்தின் மூன்றாவது உறுப்பினரான பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் இந்த அறிக்கையில் கையெழுத்திட மறுத்துள்ளார் என கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.