உயர்நீதிமன்ற தீர்ப்பு ஒவ்வொருவரினதும் உரிமை தொடர்பானது.
உயர் நீதிமன்றம் இன்று வழங்கவுள்ள தீர்ப்பு, மிகவும் முக்கியமானதென்றும் அது நாட்டு மக்களின் உரிமை சம்பந்தப்பட்டதென்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல்செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை வழங்கப்படவுள்ளது. அதுகுறித்து, உயர்நீதிமன்ற வளாகத்தில் ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்-
”நாட்டில் அநீதி இடம்பெறும்போது நாம் உயர்நீதிமன்றத்தையே நாடி வருகின்றோம். வீதிக்குச் சென்று நீதியை பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் எமக்கில்லை. அதன் காரணமாகவே நீதிமன்றத்தை நாடி வந்துள்ளோம். உயர் நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை உள்ளது. இது எமது உரிமை.
நாட்டின் ஒவ்வொரு பிரஜையின் உரிமைக்காகவே இன்று நாம் இங்கு வந்துள்ளோம். மாறாக கட்சி ரீதியில் நாம் செயற்படவில்லை.
ஆகவே இன்று வழங்கப்படவுள்ள தீர்ப்பு மிகவும் முக்கியமானது. அந்தவகையில், சிறந்த தீர்ப்பு கிடைக்குமென நாம் எதிர்பார்க்கிறோம்” என்றார்.