கட்சிநலன்சார் அரசியலால் கலவரமானது இலங்கை அரசியல்!
இலங்கையில் நடந்து கொண்டிருக்கும் அரசியலைப் பார்த்தால் அனைத்தும் தனிநபர் மற்றும் கட்சி சார்ந்த அரசியலாகவே காணப்படுகின்றது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கடந்த 2015 ஆம் ஆண்டு தனது ஆட்சியைக் கலைத்து, அதனைக் கைப்பற்றியவர்களைப் பழிதீர்க்கக் காத்துக்கிடந்தது போல் உள்ளது அனைத்து அவரின் அரசியல் நகர்வுகள்.
நல்லாட்சியில் இரு தேசிய கட்சிகளும் கூட்டனிணைந்து ஆட்சி அமைத்த போதிலும் தமது தனிப்பிட்ட அரசியலையும், தாம் சார்ந்த கட்சிகளின் நலனில் காட்டிய அக்கறை இன்று, ஜனநாயகத்திற்கே சாவு மணியை அடித்துள்ளது.
மக்களால், மக்களுக்காக, மக்களின் ஆட்சி என்பதே ஜனநாயகம், ஆனால் இலங்கையில் அரசியல்வாதிகளால், கட்சிக்கான, சட்டவிரோத ஆட்சி என்றாகியிருக்கின்றது. அந்தளவு தூரத்திற்கு இலங்கையின் அரசியல் வங்கோரோத்து நிலையை ஏட்டியுள்ளது என்கிறனர் மக்கள்!
முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து ஆட்சியினைக் கொண்டு செல்லமுடியாது என்ற கருத்தினைத் தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால, அதற்காகவே பிரதமர் பதவியில் மாற்றத்தைக் கொண்டுவந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்தரை பிரதமராக்கியதாக வியாக்கியானம் கூறினாலும் இதனை நாட்டு மக்களும் சரி சர்வதேசமும் நம்பத்தயாரில்லை என்பதையே செய்திகள் வெளிப்படுத்துகின்றன.
ரணிலுடன் இணைந்து செயற்படுவதற்கு மேலும் முடியாது என்று ஜனாதிபதி தற்போது தெரிவித்துள்ள கருத்தினை அவர் நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றி தெரிவித்திருக்கலாம், மேலும் மஹிந்தரைத் தவிர்த்து வேறு ஒருவரை பிரதமாக நியமித்திருக்கலாம் என்பதே மக்களில் பெரும்பாலானோரின் கருத்துக்களாக இருக்கின்றது.
புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷவை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையினை முடிந்தால் நிரூபித்துக் காட்டுமாறு ஐக்கிய தேசியக் கட்சி சவால் விடுத்திருந்த நிலையில், மஹிந்தர் பிரதமர் பதவியேற்று நாடாளுமன்றம் சென்று தனது செல்வாக்கை நிரூபிக்க முன்னராகவே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.
பிரதமராக நியமிக்கப்பட்ட ஒருவர் நாடாளுமன்றம் செல்லாமலே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதுதான் வேடிக்கையானது.
அரசியலமைப்பிற்கு முரணாக பிரதமர் பதவி நியமிப்பு என்றால், அதற்கு மேலே சென்று இலங்கையின் ஒட்டுமொத்த மக்களின் ஜனநாயகத்தையும் கேள்விக்குட்டுத்தும் வகையில், நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கலைத்துள்ளார். இதுவே தற்போது உயர் நீதிமன்றம்வரை சென்றுள்ளது.
இதேவேளை பிரதமர் பதவியுடன், நிதியமைச்சினைப் பெற்றுக் கொண்ட மஹிந்த ராஜபக்ஷ, தனது சொந்தக் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் உத்தியோகபூர்வமாக உறுப்பினராகியுள்ளார். மேலும் ஏற்கனவே ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் அமைச்சர்களாக இருந்த பலரையும் தனது கட்சியில் இணைத்துக் கொண்டுள்ளார்.
இந்த வருடம் முற்பகுதியில் இடம்பெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் மஹிந்தரின் கட்சியான ஸ்ரீலங்க பொதுஜன பெரமுன அதிக இடங்களை வெற்றி பெற்று பல உள்ளுராட்சி சபைகளைக் கைப்பற்றியிருந்தமை ஸ்ரீலங்க சுதந்திரக் கட்சிக்கு பேரிடியாக இருந்தது. இந்த தேர்தல் முடிவுகளே மைத்திரி – மஹிந்த இணைவிற்கு காரணமாக இருந்தது.
எனினும் இந்த விடயத்திலும் மைத்திரியின் கணக்கு தவிடுபொடியாகியுள்ளது. இதுவரை உத்தியோகப்பற்ற பொதுஜன பெருமுனவின் தலைவராக இருந்த மஹிந்த தற்போது உத்தியோகபூர்வ தலைவராக மாறியுள்ளார். அதுமட்டுமல்ல தன்னுடைய சகாக்களையும் அழைத்துச் சென்றுள்ளார்.
இதனால், இதுவரை இருந்து வந்த ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவையும் இழந்து, சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களையும் இழந்து அரசியல் ரீதியில் பலவீனமான நிலைமை ஜனாதிபதிக்கு எற்பட்டுள்ளது என்பதே அவதானிப்பாளர்களின் கருத்தாக இருக்கின்றது.
உள்நாட்டிலும், சர்வதேச மட்டத்திலும் மைத்திரி மஹிந்த தரப்பின் நற்பெயருக்கு குந்தகம் ஏற்பட்டுள்ள நிலையில், ரணில் தரப்பினருக்கான செல்வாக்கு மேலும் அதிகரித்துவருகின்றது.
அத்துடன் சமூக செயற்பாட்டாளர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் என சகல மட்டங்களினதும் ஆதரவு ஜனநாயகத்தின் மீதே காணப்படுகின்றது.
எனினும், தேர்தலில் வாக்களிக்க காத்திருக்கின்ற மக்கள் மத்தியில் மஹிந்தவிற்கு பாரிய ஆதரவு தளம் ஒன்று இருக்கின்றது என்பது மறுப்பதற்கில்லை.
அந்த வாக்கு வங்கியை, மைத்திரி – மஹிந்த கூட்டணியினால் ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராக கொண்டு வரப்பட்ட அரசியலமைபிற்கு முரணான செயற்பாட்டினால் ஏற்பட்டிருக்க கூடிய அனுதாபம் எந்தளவிற்கு ஆட்டம்காணச் செய்யும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும் – இந்த மாற்றம் தேர்தலில் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தும்.
பா.யூட்