சட்டமா அதிபரின் கூற்றை ஏற்க முடியாது!
நாடாளுமன்றை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு என தெரிவித்துள்ள சட்டமா அதிபரின் கூற்றை ஏற்க முடியாதென முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதிக்குள்ள நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி நாடாளுமன்றை கலைக்கலாமென உயர்நீதிமன்றில் சட்டமா அதிபர் இன்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, நீதிமன்ற வளாகத்தில் ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவித்த ஹக்கீம் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
சட்டமா அதிபரின் வாதத்தை ஏற்க முடியாதென குறிப்பிட்ட ஹக்கீம், நாடாளுமன்றை கலைத்த ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு இடைக்கால தடை விதிக்கப்படலாமென நம்பிக்கை வெளியிட்டார். அவ்வாறு அறிவிக்கப்பட்டால், நாளை நாடாளுமன்றம் கூடுமென்றும் குறிப்பிட்டார்.