ஜனாதிபதியாகிய பின் கட்சி மாறிய முதல் அரச தலைவர் மைத்திரி மட்டுமே.

ஜனாதிபதியாகிய பின் கட்சி மாறிய முதல் அரச தலைவர் மைத்திரி மட்டுமே.

பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக விரிவான கூட்டணியை உருவாக்குவது தொடர்பான வரைவு தயாரிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக மெழுகுவர்த்தி ஏந்தி நடத்தப்பட்ட அமைதியான போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இந்த போராட்டம் பேரவாவி அருகில் நடைபெற்றது. அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ராஜித சேனாரத்ன,

ஜனநாயக மற்றும் அரசியலமைப்பு விரோத வேலைத்திட்டங்களுக்கு எதிராக மக்கள் மத்தியில் பெரிய நிலைப்பாடு ஏற்பட்டுள்ளது.

இது கட்சி அரசியலாக வரையறுக்க முடியாத பொது விடயம். நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதாக தேர்தலில் வாக்குறுதி வழங்கிய ஜனாதிபதி, தனக்கு இல்லாத அதிகாரங்களை பயன்படுத்தி வருகிறார்.

உலகில் கட்சி மாறிய தலைவர்கள் இருக்கின்றனர். ஜனாதிபதியாக பதவிக்கு வந்த பின்னர் கட்சி மாறிய முதல் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன.

தனது கொள்கைகளை மாற்றிக்கொண்டு கட்சி மாறினார். ஜனநாயக விரோதமாக நாடாளுமன்றத்தை கலைத்தார்.

பணத்தை கொடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்களை சேர்க்க முயற்சித்த போதிலும் 113 பெரும்பான்மையை பெற முடியவில்லை.

எங்களிடம் 120 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். அவர்கள் பணத்திற்கு விலைபோகவில்லை. பணத்தை கொடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க முடியாத காரணத்தினால், நாடாளுமன்றத்தை கலைத்தார்.

அதுவே தற்போது ஜனாதிபதிக்கு பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அழிவுக்கு சென்றுள்ளது.

அந்த கட்சியை சேர்ந்த பலர் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இணைந்துள்ளனர். புதிய நெருக்கடியை ஜனாதிபதி ஏற்படுத்தியுள்ளார்.

பொதுத் தேர்தலில் போட்டியிட பெரிய கூட்டணியை நாங்கள் ஏற்படுத்துவோம். அதற்கான வரைவு திட்டம் எழுதி முடிக்கப்பட்டுள்ளதுடன் கட்சிகளுக்கும் வழங்கப்பட உள்ளது.

புதிய சின்னத்தில் தேர்தலில் போட்டியிடுவோம். தலைமைத்துவ சபையும் அதில் இருக்கும். ஜனநாயகத்தை பாதுகாத்து நாங்கள் மேற்கொள்ளும் வேலைத்திட்டங்களால் ஜனாதிபதி ஜனநாயக விரோத வேலைகளை செய்து வருகிறார்.

ஜனநாயகத்திற்காக ஒன்றிணையுங்கள். இந்த விரிவான கூட்டணியை ஏற்படுத்தி தேர்தலில் வெற்றி பெற்று சர்வாதிகாரத்தை தோற்கடிக்க வேண்டும்.

இதற்கு முன்னர் இந்த சர்வாதிகாரத்தை தோற்கடித்தோம். எதிர்வரும் தேர்தலில் வெற்றி பெற்று ஜனாதிபதிக்கு சிறந்த அரசியல் பாடத்தை புகட்டுவோம் எனவும் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net