தற்போதைய போலி அரசாங்கத்தை சர்வசேதம் ஏற்றுக் கொள்ளவில்லை.
நாட்டில் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய போலி அரசாங்கத்தை சர்வதேசம் ஏற்றுக் கொள்ளவில்லை என, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணை இன்று (செவ்வாய்க்கிழமை) இரண்டாவது நாளாக உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் வைத்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர்,
”நாட்டின் மீதான சர்வதேசத்தினதும், சர்வதேச பொருளாதாரத்தினதும் நம்பிக்கை முற்றாக வீழ்ச்சி கண்டுள்ளது. சர்வதேச சந்தையின்றி, சர்வதேச முதலீடுகளின்றி நமது நாடு பயணிக்கக்கூடும் என எவரும் எண்ணினால் அது முட்டாள்தனமானதாகும்.
எதிர்வரும் ஜனவரி மாதத்தில் இரண்டாவது வாரத்தில் 10 மில்லியன் அமெரிக்க டொலர் தவணை கட்டணமொன்றை செலுத்த வேண்டியுள்ளது. இவ்வாறாக சவாலானதொரு பொருளாதாரத்தை எதிர்வரும் காலத்தில் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
இவ்வாறானதொரு இக்கட்டான சூழ்நிலையிலேயே நாடு சர்வதேசத்தின் நம்பிக்கையை இழந்துள்ளது. தற்போது நாட்டில் உருவாகியுள்ள போலி அரசாங்கத்தை சர்வதேசம் ஏற்றுக் கொள்ளவில்லை.
இவ்வாறாக சர்வதேசம் அரசாங்கத்தை ஏற்றுக் கொள்ளாத பட்சத்தில், அரசியல், பொருளாதார மற்றும் முதலீட்டு ரீதியிலும் சர்வதேசம் அரசாங்கத்தை ஏற்றுக் கொள்ளாது” எனத் தெரிவித்தார்.