மன நோய் பிடித்தவர்களை வைத்தியசாலையில் அனுமதிக்க வேண்டும்.

மன நோய் பிடித்தவர்களை வைத்தியசாலையில் அனுமதிக்க வேண்டும்.

தாமே பிரதமர் எனக் கூறும், மன நோய் பிடித்தவர்களை வைத்தியசாலையில் அனுமதிக்க வேண்டும் என, புத்தசாசன, சமய அலுவல்கள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும் அரசியல் குழப்பநிலைக்கு மத்தியில் புத்தசாசன, சமய அலுவல்கள் அமைச்சர் உதய கம்மன்பில நேற்று(செவ்வாய்கிழமை) மாலை கண்டிக்கு சென்று மத வழிபாடுகளில் ஈடுபட்டார்.

பின், மல்வத்து பீடாதிபதி திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரைச் சந்தித்து ஆசிபெற்றார். அதனைத் தொடர்ந்து அஸ்கிரிய வராகொட ஸ்ரீ ஞானரத்ன தேரரரையும் சந்தித்து ஆசிபெற்றார்.

இதனைத் தொடர்ந்து ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

”மக்கள் மத்தியில் சென்றால் பாரிய தண்டனைக் கிடைக்கும் என்று இவர்களுக்கு தெரியும். கடந்த நான்கு வருடங்களில் நாட்டிற்கும், இராணுவத்தினருக்கும். தேசிய சொத்துக்களுக்கும், பொருளாதாரத்திற்கும், வறுமையில் வாழும் மக்களுக்கும் இவர்கள் செய்த துரோகங்களுக்கு தண்டனைக் கொடுக்க மக்கள் காத்திருக்கிறனர்.

இதற்கு அஞ்சியே அவர்கள் அழுது நீதிமன்றத்தை நாடியுள்ளனர். நாட்டில் இதுவரைக் காலமும் உத்தியோகபூர்வமான பிரதமரைத் தவிர, நானே பிரதமர் எனக் கூறிக் கொண்ட சிலர் மனநல வைத்தியசாலையிலேயே இருந்தனர்.

அந்த மனநல வைத்தியசாலையின் தடுப்புச் சுவர் உடைந்து விட்டதா என எனக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் இன்று பல இடங்களில் நான் தான் பிரதமர், நான் தான் அமைச்சர் எனக் கூறிக்கொண்டு சிலர் அலைகின்றனர்.

அவர்களை குணமாக்கவேண்டியது, அவர்களது உறவினர்களின் பொறுப்பு. அவர்களின் நோய் அவர்களுக்கு தெரியாது எனவே மற்றையவர்கள் தான் அவர்களை அழைத்துச் சென்று குணமாக்க வேண்டும்.

எமக்கு யாரும் சவாலானவர்கள் இல்லை. இந்த நாட்டு மக்களின் தேவை அறிந்து அவர்களுடன் இருக்கும் வரையில் யாரும் எங்கிருந்து வந்தாலும் எமக்கு சவால் இல்லை.

டொனால்ட் ட்ரம்ப், பராக் ஒபாமா என யாரையும் இங்கு வந்து போட்டியிடச் சொல்லுங்கள். நாங்கள் வெற்றி பெற்றுக் காட்டுவோம்“ என தெரிவித்துள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net