இறைமை தத்துவம் மக்களிடம்! அதனை செயற்படுத்த அனுமதிக்கவும்!
மக்கள் தமது இறைமையின் மூலம் அரசாங்கத்தை அமைத்துக்கொள்ள தேர்தலே ஒரே வழியென குறிப்பிட்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அதற்கு வழிவிட வேண்டுமென கோரியுள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் விசேட உரை நிகழ்த்தியபோது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அத்தோடு, கடந்த அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பாக கடும் விமர்சனங்களையும் முன்வைத்தார்.
பிரதமர் தமது உரையில் மேலும் தெரிவித்ததாவது-
”மக்கள் தமது இறைமையின் மூலம் அரசாங்கத்தை அமைத்துக்கொள்ள கடந்த காலங்களில் முன்கூட்டியே தேர்தலை நடத்துமாறு கோரினர். அவ்வாறுதான் நாமும் செய்தோம்.
கடந்த ஆட்சியாளர்களால் எதனையும் செயற்படுத்த முடியாத காரணத்தினால்தான் என்னிடம் ஜனாதிபதி பொறுப்பை ஒப்படைத்தார்.
எம்மிடம் கள்வர்களின் பட்டியல் உண்டு. மேலைத்தேய நாடுகளுடன் கூட்டுசேர்ந்துகொண்டு சபாநாயகர் செயற்படுகிறார்.
குரலோசை மூலம் நீங்கள் நேற்று நம்பிக்கையில்லா பிரேரணையை செயற்படுத்தினீர்கள்.
உங்கள் அதிகாரத்தை தவறாக விளங்கிக்கொண்டு செயற்படுகிறீர்கள். நாட்டின் பிரதமரை, அமைச்சரவையை மாற்றியமைக்க ஜனாதிபதிக்கே அதிகாரம் உண்டு.
எமது நாட்டின் 150,000 மேற்பட்ட வாக்களார்களுக்கு உங்கள் உரிமையை ஒப்படையுங்கள். அவர்கள் தீர்மானிக்கட்டும். நாங்கள் அதனை ஒப்படைக்கத் தயார். அக்ராசனத்திற்கு பிரதமரை மாற்றும் அதிகாரமில்லை. இறைமை தத்துவம் மக்களிடமே உண்டு.
அரசியலமைப்பிற்கு உட்பட்டு நாடாளுமன்றை கலைக்கும் பிரேரணையை கொண்டுவந்தால் அதனை ஆதரிப்பதாக நேற்று மக்கள் விடுதலை முன்னணியினரே குறிப்பிட்டனர். அதனை நான் மதிக்கின்றேன். ஆனால், ஐக்கிய தேசியக் கட்சி ஏன் அதனை கோரவில்லை? நீதியான தேர்தலை நடத்துமாறு நான் கோருகின்றேன்.
பெருந்தோட்ட மக்களின் 1000 ரூபாய் கோரிக்கை ஏன் நிறைவேற்றவில்லை? மாறாக விலையை அதிகரிக்கின்றீர்கள்.
பெற்றோலின் விலை உலக சந்தையில் அதிகரித்த போது நீங்களும் அதிகரித்தீர்கள். ஆனால் நாங்கள் குறைத்தோம். இவ்வாறு உங்களால் மேற்கொள்ள முடியாத விடயங்கள் பலவற்றை நாம் மேற்கொண்டோம்” என்றார்.