கோத்தபாயவும், பசிலும் மாயம்!
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோர் இப்பொழுது எங்கே இருக்கின்றார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க கேள்வி எழுப்பியுள்ளார்.
கொழும்பில் தற்பொழுது நடைபெற்று வரும் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
மேற்குலக நாடுகளின் கைப்பாவையாக எமது தரப்பு செயற்படுவதாக மஹிந்த ராஜபக்ச தரப்பு குற்றம் சுமத்தி வருகின்றார்.
உண்மையில் யார் மேற்குலக நாடுகளின் அடிவருடிகள் என்பதனை புரிந்து கொள்ள வேண்டும்.
தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் நாடாளுமன்றின் செயற்பாடுகளை பார்வையிட வருவது வழமையான விடயம்.
வரவு செலவுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு சந்தர்ப்பங்களில் இவ்வாறு ராஜதந்திரிகள் பார்வையிட வருவது வழமையானது.
பகலில் ராஜதந்திரிகளை திட்டித் தீர்க்கும் மஹிந்த தரப்பின் சிலர் இரவில் ராஜதந்திரிகளின் கொள்ளைபுறத்திற்கு சென்று வருவது பரகசியமான விடயம்.
இன்று மேற்குலக சதித் திட்டம் என குற்றம் சுமத்துபவரின் பிள்ளைகளும், குடும்பமும் அவுஸ்திரேலியாவில் இருக்கின்றனர்.
மேற்குலக நாடுகளின் சதி பற்றி பேசும் மஹிந்த ராஜபக்ச தனது சகோதரர்கள் எந்த நாட்டுப் பிரஜைகள் என்பதனை புரிந்து கொள்ள வேண்டும்.
குறிப்பாக இந்த ராஜ துரோக செயற்பாடுகளுடன் தொடர்புபட்டமை தெரியவந்தால் தமது குடியுரிமை பறி போய்விடும் காரணத்தினால்தான் கோத்தபாயவும், பசிலும் தற்பொழுது அமைதி காத்து வருவதுடன், காணாமல் போயுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.