நாடாளுமன்ற தீவிர நிலைக்கு சபாநாயகரே பொறுப்பு: மஹிந்த அணி
நாடாளுமன்றில் இன்று ஏற்பட்ட குழப்பநிலைக்கு சபாநாயகரே பொறுப்புக்கூற வேண்டுமென பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில குற்றஞ்சாட்டியுள்ளார்.
நாடாளுமன்றில் இன்று ஆளும் மற்றும் எதிர்த்தரப்புக்கு இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, நாடாளுமன்ற நடவடிக்கைகள் நாளை பிற்பகல் 1.30 வரை ஒத்திவைக்கப்பட்டன.
அதன் பின்னர் நாடாளுமன்ற கட்டட தொகுதியில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே உதய கம்மன்பில மேற்குறித்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இன்று இடம்பெற்ற மோதலில் ஆளுந்தரப்பைச் சேர்ந்த இரு உறுப்பினர்களுக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் உதய கம்மன்பில குறிப்பிட்டார். குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் இரண்டு உறுப்பினர்கள் கத்தியுடன் அவைக்கு சமூகமளித்தனரென குற்றஞ்சாட்டிய உதய கம்மன்பில, அதுகுறித்து விசாரணை நடத்தவுள்ளதாக குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும் சபாநாயகரின் பொறுப்பற்ற செயற்பாடே இன்றைய மோதலுக்கு காரணம் என்றும், அவரே பொறுப்புக்கூற வேண்டும் என்றும் உதய கம்மன்பில மேலும் தெரிவித்தார்.
இதேவேளை கட்சியை முன்னிலைப்படுத்தி, சபாநாயகர் நடுநிலையிழந்து செயற்பட்டாரென எஸ்.பி.திஸாநாயக்கவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.