பெரும்பான்மையை நிரூபிக்க முடியாதவர்களே மன்றை குழப்பினர்!
பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலையிலேயே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தரப்பினர் நாடாளுமன்றத்தில் குழப்பம் விளைவித்தனர் என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்தார்.
நாடாளுமன்றில் இன்று (வியாழக்கிழமை) ஆளும் மற்றும் எதிர்த்தரப்புக்கு இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து நாடாளுமன்ற வளாகத்தில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர்,
”இன்று காலை நாடாளுமன்றம் கூடியபோது நேற்று பிரதமருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான தீர்மானத்தை சபையில் அறிவித்தார்.
அதனை தொடர்ந்து மஹிந்த ராஜபக்ஷவின் கருத்தை சபையில் முன்வைக்கவும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து அவரது கருத்து தொடர்பாக வாக்கெடுப்பு கோரப்பட்டது.
ஆனால், அதனை நாடாளுமன்றத்தில் சம்பிரதாயபூர்வமாக நடத்தியிருக்கலாம். ஆனால், மஹிந்த ராஜபக்ஷவை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவினர் குழப்ப நிலையை ஏற்படுத்தினர்.
தங்களுக்கு பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததனாலேயே இவ்வாறு அவர்கள் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். இதுவொரு அநாகரிகமான செயற்பாடாகும்” எனத் தெரிவித்தார்.