‘ ரணிலுடன் மீண்டும் பணியாற்றுவதற்கு ஜனாதிபதி சிறிசேன வழியொன்றைக் கண்டறியவேண்டும் ‘

‘ ரணிலுடன் மீண்டும் பணியாற்றுவதற்கு ஜனாதிபதி சிறிசேன வழியொன்றைக் கண்டறியவேண்டும் ‘

அரசியல் சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதாக நாட்டு மக்களுக்கு வாக்குறுதி அளித்ததன் பேரில் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டவரான மைத்திரிபால சிறிசேன ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் மீண்டும் பணியாற்றுவதற்கு வழியொன்றைக் கண்டறிவதில் அரசியல் விவேகத்தையும் முதிர்ச்சியையும் வெளிக்காட்டவேண்டும் என்று வலியுறுத்தியிருக்கும் இந்தியாவின் தேசிய தினசரிகளில் ஒன்றான ‘ த இந்து ‘ அரசியல் நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்துவது புத்திசாலித்தனமான காரியமாக இருக்காது என்று சுட்டிக்காட்டியிருக்கிறது.

பிரதமர் பதவியிலிருந்து விக்கிரமசிங்க மூன்று கிழமைக்கு முன்னர் நீக்கப்பட்டதை அடுத்து மூண்ட அரசியல் நெருக்கடி குறித்து அண்மைய நாட்களில் அடிக்கடி ஆசிரிய தலையங்கத்தை எழுதியிருந்த குறித்த பத்திரிகை இன்றும் ‘ பக்கத்தைத் திருப்புங்கள் ‘ என்ற தலைப்பில் ஆசிரிய தலையங்கத்தைத் தீட்டியிருக்கின்றது.

அதில் தெரிவித்திருப்பதாவது ;

பாராளுமன்றத்தில் ஆசனங்களின் எண்ணிக்கை நிலைவரத்தை உறுதிப்படுத்திக்கொள்ளாமல் பிரதமரைப் பதவிநீக்கியதன் மூலமாக ஜனாதிபதி சிறிசேன அநாவசியமாக தனது நாட்டை ஆழமான நெருக்கடிக்குள் மூழ்கடித்திருக்கிறார் என்பது முன்னரை விட இப்போது கூடுதல் துலாம்பரமாகத் தெரிகிறது.

முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷவைப் பொறுத்தவரை அவரது அரசியல் சுபாவத்துக்கு முரணான வகையில் பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டது ஆச்சரியத்தைத் தருவதாக இருக்கிறது.

கட்சி தாவல்களைத் தூண்டமுடியும் என்ற ஒரே கோதாவிலேயே அவர் அவ்வாறு நடந்துகொண்டார்.பாராளுமன்றத்தில் ராஜபக்ஷவுக்கும் சிறிசேனவுக்கும் ஏற்பட்டிருக்கும் பின்னடைவை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில், பிந்திய நிகழ்வுப் போக்குகள் அரசியல் உறுதியின்மைக்கு முடிவைக்கொண்டுவரும் என்று கருதுவது கஷ்டமானதாகும்.

சிறிசேன உடனடியாக புதிய பிரதமர் ஒருவரை நியமிக்கவேண்டிய தேவை இருக்கிறது.ஆனால், விக்கிரமசிங்க அந்தப் பதவிக்கு திரும்பிவருவதை அவர் விரும்பவில்லை.

விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த இருவருக்கு பிரதமர் பதவியை வழங்கத்தயாராயிருந்ததாகவும் அவர்கள் இருவரும் மறுத்த காரணத்தால் ராஜபக்சவை பிரதமராக நியமிக்கவேண்டியிருந்ததாகவும் ஜனாதிபதி ஏற்கெனவே கூறியிருந்தார்.

மீண்டும் பாராளுமன்றத்தை இடைநிறுத்துவதற்கு தனது அதிகாரத்தைப் பயன்படுத்துவதன்மூலமாக ராஜபக்ஷவை தீர்மானம் எதையும் எடுத்து உருப்படியாகச் செயற்படமுடியாத பிரதமராக தொடருவதற்கு ஜனாதிபதி விரும்புவாரேயானால் அது ஏற்றுக்கொள்ளப்படக்கூடியதல்ல.

அரசியல் சீர்திருத்தங்களையும் நிறுவனச் சீர்திருத்தங்களையும் கொண்டுவருவதாக நாட்டு மக்களுக்கு உறுதியறித்ததன் பேரில் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்ட சிறிசேன விக்கிரமசிங்கவுடன் மீண்டும் பணியாற்றுவதற்கு வழியொன்றைக் கண்டறிவதில் அரசியல் கனவானுக்குரிய பண்பை வெளிக்காட்டவேண்டிய நேரம் இதுவாகும்.

நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்துவது புத்திசாலித்தனமானதேயல்ல.இலங்கையின் பலவீனமான பொருளாதார நிலைவரம் மற்றும் தீர்வுக்காணப்படாமல் நீடிக்கும் சிறுபான்மை இனத்தவர்களின் பிரச்சினைகள் ஆகியவற்றை மனதிற்கொண்டு ஒரு புதிய பக்கத்தை ஜனாதிபதி சிறிசேன புரட்டுவாரானால் அது சிறப்பானதாக இருக்கும்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net