இரு தரப்பினருக்கிடையிலான பேச்சுவார்த்தையே அரசியல் நெருக்கடிக்கு தீர்வு!

இரு தரப்பினருக்கிடையிலான பேச்சுவார்த்தையே அரசியல் நெருக்கடிக்கு தீர்வு!

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை தொடர்பில் இரண்டு தரப்பினரும் இணைந்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்தது.

நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே ராஜித சேனாரத்ன இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

“அரசாங்கத்தை ஸ்தாபித்துள்ளதாகக் கூறிக்கொள்ளும் தரப்பினர், தமக்கு பெரும்பான்மையான பலம் இல்லாத காரணத்தினாலேயே சபையில் இவ்வாறான குழப்பத்தில் ஈடுபட்டனர்.

இன்று அந்தத் தரப்பினருக்கு வெறும் 85 பேரே வருகைத் தந்திருந்தனர். இவர்களின் செயற்பாட்டால் அரச கட்டமைப்பே ஸ்தம்பிதமடைந்துள்ளது.

ஒரு தவறை மூடி மறைக்கவே மேலும் மேலும் அவர்கள் குற்றங்களை செய்து வருகின்றனர்.

இந்த நெடுக்கடி தொடர்பில் இரண்டு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வொன்றைக் காண வேண்டும் என்றே நாம் எண்ணுகிறோம்.

நிறைவேற்று அதிகாரத்தை இல்லாதொழிப்பதற்காக எம்மால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதி, இன்று அதையும் மீறி செயற்படுகிறார்.

இவ்வாறு இடம்பெறும் என்று நாம் கனவில் கூட நினைக்கவில்லை. இந்த செயற்பாட்டுக்கு எதிரான எமது போராட்டம் தொடரும்.” என கூறியுள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net