நாடாளுமன்றம் எவ்வாறு மக்களுக்கு வழிகாட்டப் போகின்றது?
நாடாளுமன்றில் இடம்பெற்ற விடயங்களைப் பார்க்கின்றபோது நாடாளுமன்றம் எவ்வாறு மக்களுக்கு வழிகாட்டப் போகின்றது என்ற கேள்வி எழுந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார்.
நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் பின்னர் செய்திப் பிரிவுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆற்றிய உரையும் அவரது பிரதமர் பதவியும் நேற்று இடம்பெற்ற வாக்கெடுப்பின் மூலம் செல்லுபடியற்றதாகி விட்டது.
அந்தவகையில் மஹிந்த ராஜபக்ஷ நிராகரிக்கப்பட்டுள்ளார் என்ற கருத்தைக் கூறியதன் பின்னர் அவரது கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டார்கள்.
இவ்வாறு நாகரீகமற்ற முறையில் அவர்கள் நடந்துகொண்டதைப் பார்க்கின்ற போது நாடாளுமன்றம் எவ்வாறு மக்களுக்கு வழிகாட்டப் போகின்றது என்ற கேள்வியை எங்கள் மனதில் பதியவைத்தது.
கடந்த நாட்களில் சர்வாதிகார ஆணை நிலைக்குமா என்ற கேள்வி எழுந்த நிலையில், நீதித்துறை சாதுரியமாக செயற்பட்டு அதற்கு தற்காலிகமான தீர்வொன்றினை வழங்கியிருந்தது.
எனினும் இந்த அரசியல் நிலை தொடர்ந்து செல்லும்போது இந்த அரசாங்கத்தைப் பற்றி மக்கள் கேள்வியெழுப்பக்கூடிய நிலையும் மேற்குலக நாடுகள் ஒரு கேளிக்கையாக பாரக்கக் கூடிய நிலையும் தோன்றியிருக்கிறது.
இது இவ்வாறு இருக்கின்றபோதும், எமது மக்களின் தேசிய பிரச்சினைக்கு சரியான தீர்வினை தர நினைக்கின்ற தரப்பினருக்கே எமது ஆதரவு இருக்கும் என்பதையும் கூறிக்கொள்கின்றேன்” என்று அவர் தெரிவித்தார்.