மஹிந்த உட்பட அனைவரும் நாடாளுமன்ற உறுப்பினர்களே!
மஹிந்த ராஜபக்ஷ உட்பட புதிய அரசாங்கத்தில் உள்ளவர்கள் அனைவரும் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவே கருதப்படுவார்கள் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று(வியாழக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர்,
“மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லைப் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பில் 122 உறுப்பினர்களின் கைச்சாத்தும் சபாநாயகர் ஊடாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நாளை அமர்வு தொடர்பில் இதுவரை எந்தவொரு தீர்மானத்தையும் நாம் எடுக்கவில்லை.
பெரும்பான்மை இல்லாமல் இவர்கள் அரசாங்கத்தை ஸ்தாபித்துள்ளமையானது, ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.
எனவே, சபாநாயகரின் அறிவுப்புக்கு இணங்க அனைவரும் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவே கருதப்படுவார்கள்.” என மேலும் தெரிவித்தார்.