ஏன் அவசரப்பட்டு பிரதமர் பதவியை ஏற்றார் மஹிந்த?

ஏன் அவசரப்பட்டு பிரதமர் பதவியை ஏற்றார் மஹிந்த?

கடந்த ஒக்டோபர் மாதம் 26ம் திகதி ஏற்பட்ட அரசியல் நெருக்கடி நிலை இன்றுடன் 23 நாட்களை எட்டியிருக்கின்றது.

இன்று பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் தலைவர்களுடனான சந்திப்பிற்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ள நிலையில் நாட்டை சின்னாபின்னமாக்கிக்கொண்டிருக்கும் இந்த அரசியல் நெருக்கடி அடுத்து வரும் நாட்களில் தீருமா ? அன்றேல் இன்னமும் பல நாட்களுக்கு அலைக்கழிக்க வைக்குமா என்பது பெரும் கேள்வியாகவுள்ளது.

கடந்த மூன்றரை வருட காலத்தில் கருத்து வெளியிடும் சுதந்திரத்தை உறுதிப்படுத்தியமை ஜனநாயகத்தை மீள் நிறுத்தியமை உட்பட பல விடயங்களை ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் செய்திருந்த போதும் பொருட்களின் விலையேற்றத்தால் வாழ்க்கைச் செலவில் ஏற்பட்ட அதிகரிப்புக் காரணமாக மக்கள் மத்தியில் அதன் செல்வாக்கு வீழ்ச்சி காணத்தொடங்கியது.

இதனை கடந்த பெப்ரவரி 10 திகதி இடம்பெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் மக்கள் வெளிக்காண்பித்திருந்தனர்.

மஹிந்த ராஜபக்ஷ தலைமைத்துவம் வழங்கிய பொதுஜன பெரமுண கட்சிக்கு அமோக ஆதரவு கிட்டியது.

இப்படியே நிலைமை சென்றிருந்தால் அரசியலமைப்பிற்கமைய அடுத்த பொதுத் தேர்தல் 2020ல் நடைபெறும் காலப்பகுதி வரும் போது ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தின் மீதான மக்களின் வெறுப்பு அதிகரித்திருக்கும்.

இந்த நிலையில் மஹிந்த ராஜபக்ஷ தரப்பினருக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அதிகமான வாக்குகளைப் பெற்றிருக்கமுடியும்.

இதனை நேற்றைய தினம் அவிசாவளையில் ‘எலிய’ அமைப்பு ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் உரையாற்றிய கோத்தாபய ராஜபக்ஷவும் கூறியிருந்தார்.

”இன்னும் ஒன்றரை ஆண்டுகள் மகிந்த ராஜபக்ச காத்திருந்தால், மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் பிரதமராகப் பதவியேற்றிருக்க முடியுமே என்று சிலர் கேட்கின்றனர்.

மஹிந்த ராஜபக்சவினால் அதனைச் செய்ய முடியும் என்று எனக்கு நன்றாகத் தெரியும்.

தேர்தலுக்காக இன்னும் ஒன்றரை ஆண்டுகள் மஹிந்த ராஜபக்ச காத்திருந்தால், மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் பிரதமராகப் பதவியேற்றிருக்க முடியும்.

ஆனால் பிரச்சினை என்னவெனில், நாடு இன்னமும் ஒன்றரை ஆண்டுகளுக்கு காத்திருக்க முடியுமா? என்பதேயாகும்.

ரணில் விக்கிரமசிங்கவை உருவாக்கியது வெளிநாட்டு சக்திகள் தான்.நாடாளுமன்றத்தில் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்ட போது, பார்வையாளர் மாடத்தில் இருந்த மேற்குலக இராஜதந்திரிகள் கைதட்டி வரவேற்றனர்” என்றும் கோத்தாபய ராஜபக்ஷஅ தெரிவித்துள்ளார்.

ஆனால் கோத்தாவின் கருத்துக்கு முரணான கருத்துக்களும் அரசியல், ஊடகப் பரப்பில், இராஜதந்திர சமூகத்தினர் மத்தியில் தற்போது தெரிவிக்கப்படுகின்றன.

அடுத்துவரும் நாட்களில் ராஜபக்ஷவினருக்கு எதிராக பல நீதிமன்ற வழக்குகள் அடுத்தடுத்து வரவிருந்த நிலையிலேயே அவசரமாக பிரதமர் பதவியை ஏற்பதற்கு மஹிந்த ராஜபக்ஷ முற்பட்டார் என்ற கருத்துக்கள் தற்போது வெளியிடப்படுகின்றன.

மீண்டும் இரண்டாவது தடவையாக ஜனாதிபதியாக வரும் அவாவில் இருந்த ஜனாதிபதி சிறிசேன ஐக்கிய தேசியக் கட்சியிடம் தனது விருப்பத்தை வெளியிட்டபோதும் அதற்கு உரிய பதில் கிடைக்காத நிலையில் மஹிந்த தரப்புடன் சமரசம் செய்துகொண்டதுடன் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு உடன்பட்டிருந்தார்.

ஆனால் இவ்வளவு விரைவாக மஹிந்தவை பிரதமராக நியமிப்பதற்கு அவர் திட்டமிட்டிருந்தாரா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை.

ஆனால் மஹிந்த ஆதரவு கூட்டு எதிர்க்கட்சியைச் சேர்ந்த இரண்டு முக்கியஸ்தர்கள் ஜனாதிபதியிடம் சென்று தம்மால் 120 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் பெரும்பான்மையை நிருபிக்க முடியும் என பெரும் நம்பிக்கையை வெளிப்படுத்திய நிலையிலேயே ஒக்டோபர் 26ம் திகதியன்று ஒரு திருமண வைபவத்தில் பங்கேற்றிருந்த மஹிந்த ராஜபக்ஷவை ஒரு மணி நேர முன்னறிவிப்பிற்குள்ளாக ஜனாதிபதி சிறிசேன பிரதமராக பதவிப்பிரமாணம் செய்துவைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதற்குப்பின்னர் நடந்தது,நடந்துகொண்டிருப்பது என்ன என்பது உள்நாட்டவர்களுக்கு மட்டுமன்றி உலகிற்குமே வெளிச்சம்.

Copyright © 4935 Mukadu · All rights reserved · designed by Speed IT net