‘கஜா’ புயல் விவகாரம்: பொலிஸார் மீது விவசாயிகள் கல்வீச்சு தாக்குதல்!

‘கஜா’ புயல் விவகாரம்: பொலிஸார் மீது விவசாயிகள் கல்வீச்சு தாக்குதல்!

‘கஜா’ புயலில் ஏற்பட்ட சேத விபரங்கள் கணக்கெடுப்பில் குளறுபடி ஏற்பட்டதால் அதிகாரிகள் மற்றும் பொலிஸார் மீது விவசாயிகள் கல்வீச்சு தாக்குதல் நடத்தியதுடன் வாகனங்களுக்கும் தீ வைத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் அதிகளவான சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிப்படைந்துள்ளது.

மேலும் மின்சாரம், குடிநீரின்றி பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். ஆனால் அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்வதற்கு எந்த அதிகாரிகளும் நடவடிக்கை மேற்கொள்ளாதமையால் மக்கள் மிகவும் விரக்தியடைந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று (சனிக்கிழமை) இரவு வேளாண்மை உதவி அலுவலர்கள் இருவர், கொத்தமங்கலம் பகுதியில் சேத மதிப்பை கணக்கிட சென்றபோது அப்பிரதேச மக்கள் சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் ஏனைய அதிகாரிகள் பொலிஸார் பாதுகாப்புடன் ஆலங்குடி தாலுகா அலுவலகத்திற்கு சென்றுள்ளனர்.

இதன்போது அப்பகுதி விவசாயிகள் சேத விபரங்கள் தொடர்பில் விசாரித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து குறித்த தகவலில் குளறுபடிகள் காணப்படுவதாக கூறி, ஆத்திரமடைந்த விவசாயிகள், அதிகாரிகள் மற்றும் பொலிஸார் மீது கல் வீச்சு தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் அதிகாரிகள் அவ்விடத்திலிருந்து வெளியேறியுள்ளனர்.

இந்நிலையில் குறித்த பகுதியில் காணப்பட்ட தாசில்தார் மற்றும் பொலிஸாரின் 4 கார்களை விவசாயிகள் மற்றும் பிரதேச மக்கள் ஒன்றைிணைந்து தீ வைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை தொடர்ந்து நிலவி வருகின்றதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net