நாடாளுமன்ற மோதல் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பதிவு!
நாடாளுமன்றத்தில் அண்மையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் இதுவரை 6 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விசாரணைகளுக்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
அத்துடன், கடந்த வௌ்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட மோதலின்போது காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர்களின் மருத்துவ அறிக்கைகளையும் பெற்றுக்கொள்வதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.
இதுவரையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஐவரின் மருத்துவ அறிக்கைகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மஹிந்த அணியினர், நேற்று முந்தினம் சபாநாயகரின் அக்ராசனத்தை முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பியதுடன், சபை அமர்விற்கும் இடமளிக்கவில்லை.
நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்னாண்டோ சபாநாயகரின் அக்ராசனத்தில் அமர்ந்திருந்தார்.
அத்துடன், சபாநாயகரின் பாதுகாப்புக்காக நாடாளுமன்றத்துக்குள் பிரவேசித்த பொலிஸார் மீதும் அவர்கள், சபையில் இருந்த தளபாடங்கள் மற்றும் புத்தகங்களால் வீதி தாக்குதல்களை நடாத்தியிருந்தனர்.
இந்த தாக்குதல்களில், 16 பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றிருந்தனர். இதுதவிர, மஹிந்த தரப்பினர் மிளகாய்த்தூள் கலந்த நீர் பிரயோகங்களையும் மேற்கொண்டிருந்தனர்.
இந்த தாக்குதல்கள் காரணமாக பொலிஸார், மக்கள் விடுதலை முன்னணியின் விஜித ஹேரத் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மலிக் சமரவிக்கிரம மற்றும் காமினி ஜயவிக்கிரம பெரேரா ஆகியோர் காயமடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.