பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களுடனான தொடர் சந்திப்புகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் துரிதப்படுத்தியுள்ளது!
எதிர்வரும் மார்ச் மாதம் நடக்கவிருக்கிற கூட்டத்தொடரில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (International Criminal Court) பரிந்துரை செய்யக்கோரி நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களை தொடர்ச்சியாக சந்தித்து வருகின்றது.
அந்த வகையில் Barking தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் Dame Margaret Hodge MP அவர்களுக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்க உறுப்பினர்களுக்கும் இடையில் நவம்பர் 02ம் திகதி சந்திப்பொன்று நடைபெற்றது.
நாடு கடந்த தமிழீழ அரசின் மனித உரிமைகள் அமைச்சர் பத்மநாபன் மணிவண்ணன் மற்றும் விளையாட்டு மற்றும் சமுக நலன் பேணும் பிரதியமைச்சர் சொக்கலிங்கம் யோகலிங்கத்தினுடைய நெறிப்படுத்தலில் செயற்பாட்டாளர்களான நுஜிதன் இராசேந்திரம்,பிரேமகாந்தன் சிதம்பரம் , பொன்ராசா புவலோயன் ஆகியோர் கலந்துகொண்ட குறித்த சந்திப்புக்களில் யுத்த குற்றத்தில் ஈடுபட்ட முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீண்டும் இலங்கை பிரதமராக பதவியேற்றமை தொடர்பாகவும் வடகிழக்கு ஒன்றிணைப்பு மற்றும் சமஸ்டி ஆட்சி என்பன தான் உயிருடன் இருக்கும் வரை ஒரு போதும் நிகழாது என மைத்திரி கூறியது பற்றியும் தற்போது ஏற்பட்பட்டுள்ள ஆட்சி மாற்றம் பற்றியும் இதனால் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் மற்றும் சாதக பாதக நிலைமைகள் தொடர்பாகவும் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது
அது மட்டுமல்லாமல் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு (international criminal court) பரிந்துரைப்பதற்கான மனுவொன்றும் கையளிக்கப்பட்டதுடன் இலங்கையின் நீதிப்பொறியமைவுகளை கண்காணிக்கும் பொறுப்புடமைக்கான சர்வதேச நிபுணர் குழுவின் ( Sri Lanka Monitoring and Accountability Panel) அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டது
குறிப்பிட்ட மனுவிற்கு ஆதரவு தெரிவித்தது குறித்த மனுவில் கையொப்பம் இட்டதுடன் இது தொடர்பாக அனைத்துகட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்தாய்வு செய்து வருகின்ற பெப்ரவரி மாதமளவில் இது தொடர்பான பாராளுமன்ற விவாதம் ஒன்றை ஒழுங்குசெய்வதாகவும் உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் தமிழ் அரசியற் கைதிகள், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ்த் தொடரும் கட்டுப்பாடில்லாத தடுத்துவைப்பு, தமிழ்ப் பிரதேசங்களில் பெருமளவிலான பாதுகாப்புப் படைகள் நிலைகொண்டுள்ளமை மற்றும் இத்தீவின் வடக்கு-கிழக்குப் பிராந்தியத்திலுள்ள தனியார் காணிகளில் இலங்கைப் பாதுகாப்புப் படைகள் தரித்திருக்கின்றமை ஆகியவற்றை கண்காணிப்பதன் பொருட்டு இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையிடும் பிரதிநிதி ஒருவரை நியமிக்குமாறும் கோரிக்கை முன்வைக்கப்பட்டதுடன் காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சனைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது
நல்லாட்சி என்று தம்மை தாமே சொல்லுகின்ற அரசாங்கத்தின் ஆட்சியிலும் தொடர்கின்ற கைதுகள், பாலியல் துஸ்பிரயோகங்கள், சித்திரவதைகள், காணாமல் போனோர் விவகாரம், அரசியல் போர்க் கைதிகளின் விடுதலை போன்ற சமகால பிரச்சனைகளையும் பாராளுமன்ற உறுப்பினருக்கு எடுத்துக்கூறினார்கள்.