அரசியல் குழப்பநிலைக்கு ஜனாதிபதியும் பொறுப்புக்கூற வேண்டும்!
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்திரமற்ற தன்மைக்கு ஜனாதிபதி உள்ளடங்களாக பலர் பொறுப்புக்கூற வேண்டியவர்களாக உள்ளனர் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இன்றைய (திங்கட்கிழமை) நாடாளுமன்ற அமர்வின் பின்னர் நாடாளுமன்ற கட்டட தொகுதியில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
நாடு தற்போது அதள பாதாளத்திற்குச் சென்றுள்ளதென குறிப்பிட்ட சஜித், பாதாளத்திற்குள் விழுவது மாத்திரமே எஞ்சியுள்ளதென குறிப்பிட்டார். அத்தோடு, நாடாளுமன்றில் தற்போது நடப்பது அனைத்தும் நாடகம் என்றும் என்றும் கூறினார்.
இதன்போது, ஐ.தே.க.வின் தலைமைத்துவத்தை ஏற்பது தொடர்பாக எமது ஆதவன் செய்தியாளர் கேள்வியெழுப்பினார்.
இதற்கு பதிலளித்த சஜித், தான் தலைமைத்துவத்தை ஏற்பதால் பிரச்சினைகள் தீராதென்றும், தலைமைத்துவம் தனக்கு முக்கியமில்லையென்றும் குறிப்பிட்டார். அத்தோடு, தலைமைத்துவம் ஏற்பதென்றால் சரியான முறையிலேயே பதவியேற்பேன் என்றும் குறிப்பிட்டார்.
இதேவேளை, இரண்டாவது தடவையாகவும் ஜனாதிபதியாக பதவிவகிப்பதற்காகவா ஜனாதிபதி மைத்திரி செயற்பட்டு வருகின்றார் என கேள்வியெழுப்பினார்.
இதற்கு பதிலளித்த சஜித், ஜனாதிபதியின் நோக்கம் தொடர்பாக தனக்கு தெரியாதென்றும், எவ்வாறாயினும் தற்போதைய நிலைமைகளுக்கு ஜனாதிபதி உள்ளடங்களாக பலர் பொறுப்புக்கூற வேண்டுமென்றும் குறிப்பிட்டார்.