சர்ச்சைகளுக்கு மத்தியில் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்!
இலங்கை அரசியலில் நீடிக்கும் குழப்பநிலைக்கு மத்தியில் நாடாளுமன்றம் இன்று (திங்கட்கிழமை) மீண்டும் கூடவுள்ளது.
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று பிற்பகல் 1 மணிக்கு நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாகவுள்ளன.
ஏற்கனவே இடம்பெற்ற அமர்வுகளில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையில் கடும் அமளி துமளி ஏற்பட்டு கைகலப்பில் முடிவடைந்தது. சிலர் காயமடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக கடந்த அமர்வுகள் யாவும் ஒரு சில நிமிடங்கள் மாத்திரமே நீடித்ததோடு, பிரதமர் மஹிந்தவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை குரல்மூல வாக்கெடுப்பில் வெற்றிபெற்றதாக சபாநாயகர் அறிவித்தார்.
எனினும், அதனை ஏற்க முடியாதென ஆளுந்தரப்பு குறிப்பிட்டு பெரும் குழப்பங்கள் ஏற்பட்ட நிலையில் இன்று நாடாளுமன்றம் மீண்டும் கூடவுள்ளது.
இதேவேளை நாடாளுமன்றில் பிரச்சினைகளை தோற்றுவிக்காது செயற்படுவதாக நேற்று ஜனாதிபதியுடன் இடம்பெற்ற சந்திப்பில் கட்சிகள் இணங்கியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டிருந்தது.
இந்நிலையில், இன்றைய நாடாளுமன்ற அமர்வு குறித்த எதிர்பார்ப்பு வலுப்பெற்றுள்ளது.
எவ்வாறாயினும், மஹிந்த ராஜபக்ஷவின் பிரதமர் பதவியில் மாற்றத்தை ஏற்படுத்த மாட்டோமென ஆளுந்தரப்பு குறிப்பிட்டு வருகின்ற நிலையில், இன்றைய அமர்விலும் பிரச்சினைகள் ஏற்படலாமென தெரிவிக்கப்படுகிறது. எனினும், எந்த சூழ்நிலையிலும் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட மாட்டாதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.