பெரும்பான்மையை மீண்டும் நிரூபிப்போம்! – ஐ.தே.க.
நாடாளுமன்றில் தமக்குள்ள பெரும்பான்மையை இன்று மீண்டும் நிரூபிப்போம் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று (திங்கட்கிழமை) பிற்பகல் 1 மணிக்கு கூடவுள்ளது.
இந்நிலையில் இன்று நடத்தப்படும் வாக்கெடுப்பிலும் பெரும்பான்மையை நிரூபிப்போம் என ஐ.தே.க. குறிப்பிட்டுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் கடந்த அமர்வுகளில் குரல்மூல வாக்கெடுப்பு இடம்பெற்றது.
பெரும் கூச்சல் குழப்பங்களுக்கு மத்தியில் இந்த வாக்கெடுப்பு இடம்பெற்ற போதும், நம்பிக்கையில்லா பிரேரணை வெற்றிகொள்ளப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார்.
எனினும், ஆளுந்தரப்பு இதனை ஏற்றுக்கொள்ள மறுத்தது. இந்நிலையில், இரு தரப்பிற்கும் இடையில் மோதல் வெடித்தது.
பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத காரணத்தால் ஆளுந்தரப்பு திட்டமிட்டு குழப்பம் விளைவித்து, சபை நடவடிக்கைகளை ஒத்திவைக்க முனைவதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ்சாட்டி வருகின்றது.
இதேவேளை, வாக்கெடுப்பு எந்த முறையில் இடம்பெற்றாலும் தாம் வெற்றிபெறுவது உறுதியென ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.