சிறீலங்காவில் தமிழினவழிப்பு தொடர்கின்றது!! ஐரோப்பிய பாராளுமன்றத்தில் தமிழர் இயக்கம் தெளிவுற எடுத்துரைப்பு.

சிறீலங்காவில் தமிழினவழிப்பு தொடர்கின்றது!! ஐரோப்பிய பாராளுமன்றத்தில் தமிழர் இயக்கம் தெளிவுற எடுத்துரைப்பு.

ஐரோப்பிய நாடாளுமன்றங்களிற்கு இடையிலான (Interparliamentary Committee Meeting) மனித உரிமைகள் விடயங்கள் தொடர்பான கூட்டத்தொடர் நேற்று 19. 11. 2018 ஆரம்பித்து 23. 11. 2018 வரை இடம்பெற்று வருகின்றது.

அதேவேளை, நேற்று (19) காலை 9.00 மணி தொடக்கம் 11.30 மணி வரை ஐரோப்பிய இளையோர் பாராளுமன்றமும் ஒன்றுகூடலும் இடம்பெற்றது.

இவ் ஒன்றுகூடலில் ஈழத்தமிழர்கள் சார்பாக தமிழர் இயக்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர்.

அதைத் தொடர்ந்து, நேற்று (19) மாலை 15.00 மணி தொடக்கம் 16.00 மணிவரை ஐரோப்பிய நாடாளுமன்றங்களிற்கு இடையிலான மனித உரிமைகள் தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது.

அக் கலந்துரையாடலில் கலந்துகொண்ட தமிழர் இயக்க பிரதி நிதிகள்; இன்றுவரை சிறீலங்காவில் தமிழர்கள் தமிழினவழிப்பிற்கு உள்ளாக்கப்படுவது தொடர்பாகவும், நிகழ்காலச் சூழலில் சிறீலங்காவில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் சனநாயகப் படுகொலை பற்றியும் கூட்டத்தொடரில் கலந்துகொண்ட நாடாளுமன்ற பிரதி நிதிகளிற்கு எடுத்துரைத்ததுடன், இவை பற்றிய ஆய்வறிக்கை ஒன்றையும் இப் பிரதிநிதிகளிற்கு வழங்கியிருந்தனர்.

இக் கலந்துரையாடலில் ஐரோப்பாவின் சவுதி அரேபியாவுடனான எதிர்கால உறவு நிலை, விளையாட்டும் மனித உரிமைகளும் மற்றும் துருக்கித் தலை நகரான இஸ்தாம்புலில் சவுதி அரேபிய தூதுவராலயத்திற்குள் வைத்து படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் Jamal Khashoggi பற்றிய விடயங்கள் பிரதான கருப்பொருளாக விளங்கியது.

இவற்றைத் தொடர்ந்து நாளை “பன்னாட்டு மனிதவுரிமைகள் உடன்படிக்கை”
(Universal Declaration of Human Rights) கைச்சாத்திடப்பட்டு 70 வது வருடம் பூர்த்தியாகும் நிலையில்,

ஓர் மாபெரும் கருத்தரங்கும் இடம்பெறவுள்ளது. இக் கருத்தரங்கிலும் தமிழர் இயக்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளனர்

ஈழத்தமிழர்கள் சிறீலங்காவில் தொடர்ந்தும் இனவழிப்பிற்கு உள்ளாக்கப்பட்டுக்கொண்டிருக்கும் சூழலிலும்கூட,
ஐரோப்பிய நாடுகளில் அண்ணளவாக 1.3 மில்லியன் ஈழத் தமிழர்கள் வாழ்கின்ற போதும், இவ்வாறான முக்கிய கூட்டத் தொடர்கள் ;
புலம்பெயர் தமிழர் அமைப்புகள் அல்லது தனி நபர்களின் பிரசன்னமின்றி, தனியே தமிழர் தரப்பிலிருந்து தமிழர் இயக்கப் பிரதிநிதிகளின் பங்குபற்றலுடன் இடம்பெற்று வருவதானது மிகவும் மனவேதனையளிப்பதுடன் நாம் ஒருகணம் நின்று நிதானித்தறிய வேண்டிய விடையமுமாகும்.

இந் நிலையானது எமது இனவிடுதலை சார்ந்த செயற்பாடுகளின் மந்த கதியையும், வலுவாகவும் திறமையாகவுமுள்ள எமது இளம் தலைமுறையினர் இவ் விடயம் சார்ந்து தயார்படுத்தப்படாத வெற்றிடத்தையுமே எடுத்துக்காட்டுகின்றது.

இத்தகைய ஓர் அரசியற்தள வெற்றிடத்தாலும், சரியான வழிகாட்டலின்மையாலும், ஐரோப்பாவில் 1.3 மில்லியன் தமிழ் மக்கள் இருந்தும் ஓர் அரசியல் நிர்ணய சக்தியாக எம்மால் மேலெழ முடியாத நிலையே காணப்படுகின்றது.

இவற்றைக் கருத்திற்கொண்ட எம் இனத்தின் விடுதலைக்கான பயணத்தில், தமிழர் இயக்கம் இவ்வாறான அடிப்படை பணிகளை படிப்படியாகக் கட்டமைத்து செயற்படுத்திவருகின்றது.

இச் செயற்பாடுகளிற்கான பேராதரவையும் ஒத்துழைப்பையும் உலகத் தமிழர்கள்,
ஐரோப்பிய நாடுகளில் வாழும் ஈழத் தமிழர்கள், குறிப்பாக இளைய தலைமுறையினரிடம் அன்புரிமையுடன் வேண்டி நிற்கின்றது.

யதுர்சன் சொர்ணலிங்கம்
லண்டன்

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net