சட்டரீதியற்ற அரசாங்கத்தின் நிதி நடவடிக்கைகளை முடக்குவோம்!

சட்டரீதியற்ற அரசாங்கத்தின் நிதி நடவடிக்கைகளை முடக்குவோம்!

சட்டரீதியற்ற நிழல் ஆட்சியின் நிதிநடவடிக்கைகளை நாம் முற்றாக முடக்குவோம் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று(திங்கட்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கமும் அதன் அமைச்சரவை அமைச்சர்கள் அனைவரும் நிழல் அமைச்சர்கள் ஆகும்.

இவர்களின் முழு நேர தொழில் இன்று நாடாளுமன்றத்தில் மிளகாய்ப் பொடி தூவுவதும், எமது ஆட்சி ஆரம்பித்து வைத்த ‘கம்பெரலிய’ என்ற ஊரெழுச்சி வேலைத்திட்டங்களை இடைநிறுத்தி வைப்பதும் ஆகும்.

நாட்டின் நிதி தொடர்பான பொறுப்பும், இறுதி முடிவெடுக்கும் அதிகாரமும் நாடாளுமன்றத்திடமே உள்ளது.

அரசாங்க அமைச்சுக்களின் எந்த ஒரு நிதி ஒதுக்கீட்டு மற்றும் செலவு நடவடிக்கைகளும், நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, நாடாளுமன்றம் ஏற்றுக்கொண்ட பின்னரே செல்லுபடியாகும்.

இதேபோல் கடந்த வரவு செலவு திட்டத்தில் ஒவ்வொரு அமைச்சுக்கும் ஒதுக்கப்பட்ட, நிதி ஒதுக்கீடுகளை கண்காணிக்கும், இடை நிறுத்தும் அதிகாரமும் நாடாளுமன்றத்திற்கே உள்ளது.

இந்நிலையில் நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசிய முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி ஆகிய எமது பக்கமே பெரும்பான்மை பலம் உள்ளது.

இதன் ஒரு அம்சமாக நாம் எதிர்வரும் 29 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் விவாதித்து நிறைவேற்றும் முகமாக, பிரதமர் அலுவலக செயலாளரின் நிதி நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் பிரேரணையை இன்று சபாநாயகரிடம் கையளித்துள்ளோம்.

இது ஒரு ஆரம்பம் மட்டுமே. இதை தொடர்ந்து, இந்த மிளகாய்ப் பொடி மகிந்த ஆட்சியின், அனைத்து அமைச்சுகளின் செயலாளர்களுக்கு எதிராகவும் நாம் இத்தகைய பிரேரணைகளை கொண்டு வருவதுடன், இந்த நிழல் ஆட்சியின் நிதிநடவடிக்கைகளை நாம் முற்றாக முடக்குவோம்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

Copyright © 6890 Mukadu · All rights reserved · designed by Speed IT net