இணங்கிச் செல்ல தயார்! மகிந்த தரப்பு விதித்துள்ள நிபந்தனை!
சபாநாயகர் ஆளும் தரப்பினருக்குப் பெரும்பான்மையளித்து தெரிவுக் குழுவை நியமிப்பாராயின் நாடாளுமன்றத்துடன் இணங்கிச் செல்வோம் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.
இல்லையேல் அமைச்சரவையை அடிப்படையாக கொண்ட அரசாங்கத்துடன் நாட்டை நடத்திச் செல்ல தீர்மானித்துள்ளோமெனவும் அந்த முன்னணி அறிவித்துள்ளது.
இந்நிலையில், எதிர்க்கட்சியினர் முன்வைத்திருக்கும் பிரதமர் செயலாளரின் செலவீனங்களை இடைநிறுத்தும் பிரேரணை சட்டவிரோதமானது எனவும் ஐ.ம.சு.மு சுட்டிக்காட்டியுள்ளது.
அரசாங்க ஊழியர்கள், ஓய்வூதியக்காரர்கள் மற்றும் சமுர்த்தி பெறுவொருக்கு எவ்வித தடையுமின்றி உரிய நேரத்தில் கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்சித் தலைவர்கள் கூட்டத்தை நடத்திய சபாநாயகர் ஆளும் தரப்பினரின் சவால்களுக்கு முகம்கொடுக்க முடியாமலேயே நேற்று நாடாளுமன்ற அமர்வுகளுக்கு முகம் கொடுக்காமல் பிரதி சபாநாயகரை அனுப்பி சபையை ஒத்தி வைத்துள்ளார்.
மேலும் சபாநாயகர் வெளிநாட்டு தூதுவர்களுக்கு வேண்டிய விதத்தில் சபை செயற்பாடுகளை முன்னெடுப்பதன் மூலம், நிறைவேற்று அதிகாரத்துக்கும் அரசியலமைப்புக்குமிடையில் பாரிய முரண்பாட்டை தோற்றுவித்துள்ளார்.
அத்துடன், அதற்குரிய களமாக நாடாளுமன்றத்தை உருவாக்கியிருப்பது மிகவும் வேதனைக்குரிய விடயமென்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கூறியுள்ளது.