இன்டர்போல் தலைவராக தென்கொரியாவின் கிம் ஜொங் தெரிவு!
சர்வதேச பொலிஸ் துறையான இன்டர்போலிற்கு தலைமை தாங்கும் ரஷ்யாவின் எண்ணம் முறியடிக்கப்பட்டு, அப்பதவிக்கு தென்கொரியர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதன்படி, இன்டர்போலின் புதிய தலைவராக தென்கொரியாவின் கிம் ஜொங் யங் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
டுபாயில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற பொதுக் கூட்டத்தின் 87ஆவது அமர்வின் போது கிம் ஜொங் தலைவராக தெரிவுசெய்யப்பட்டார்.
அதன்படி, கிம் ஜொங் எதிர்வரும் 2020ஆம் ஆண்டுவரை இப்பதவியில் நீடிப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இன்டர்போல் தலைவராக ரஷ்ய முன்னாள் உள்துறை அமைச்சின் அதிகாரியான அலெக்சான்டர் ப்ரோகோப்சக் நியமிக்கப்படுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அரசியல் எதிரிகளை இலக்கு வைப்பதற்கு இன்டர்போல் அமைப்புகளை பயன்படுத்த மொஸ்கோ முயற்சிப்பதாக குற்றம்சாட்டி அவரது நியமனத்தை விமர்சகர்கள் எதிர்த்து வந்த நிலையில், தென்கொரியர் ஒருவர் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.