நிசாந்த சில்வா இடமாற்றத்தை பொலிஸ்மா அதிபரே தீர்மானித்தார்!
குற்றப்புலனாய்வுப் பிரிவின் விசாரணை அதிகாரியான நிசாந்த சில்வாவின் இடமாற்றத்தை ரத்துசெய்யுமாறு பொலிஸ்மா அதிபருக்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழு உத்தரவிட்டதாக வெளியான தகவலை குறித்த ஆணைக்குழு மறுத்துள்ளது.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் சமன் திஸாநாயக்க இதுகுறித்து குறிப்பிடுகையில், குற்றப்புலனாய்வுப் பிரிவானது பொலிஸ் ஆணைக்குழுவின் விடயப்பரப்புக்குள் அடங்காதென சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தோடு, இடமாற்ற உத்தரவு மற்றும் அதனை ரத்து செய்தமை ஆகிய இரு விடயங்களும் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவினாலேயே முன்னெடுக்கப்பட்டதென்றும், தேசிய பொலிஸ் ஆணைக்குழு அதற்கு பரிந்துரைக்கவில்லையென்றும் சமன் திஸாநாயக்க மேலும் கூறியுள்ளார்.
கடந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற கொலை, கொள்ளை, கடத்தல், காணாமல் ஆக்கப்பட்டமை, பாரிய ஊழல் மோசடி என பல முக்கிய வழக்குகளில் விசாரணை அதிகாரியாக செயற்பட்ட நிசாந்த சில்வா, கடந்த 19ஆம் திகதி நீர்கொழும்பு பொலிஸ் பிரிவிற்கு மாற்றப்பட்டார்.
விசாரணைகளை மூடிமறைக்கும் வகையில் இச்செயற்பாடு இடம்பெற்றதாக உள்நாட்டில் மட்டுமன்றி, சர்வதேச ரீதியில் மனித உரிமைசார் அமைப்புகள் இதற்கு கண்டனம் வெளியிட்டிருந்தன.
அதன் பின்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனையின் பிரகாரம் தேசிய பொலிஸ் ஆணைக்குழு குறித்த இடமாற்றத்தை ரத்துசெய்ததாக நேற்று அறிவிக்கப்பட்டது.
எனினும், பொலிஸ்மா அதிபரின் உத்தரவிலேயே இடமாற்றம் மற்றும் அதனை ரத்துசெய்த செயற்பாடு இடம்பெற்றுள்ளதென பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.