பயணத்தடையை எதிர்நோக்கும் ஆபத்தில் இலங்கை அரசியல்வாதிகள்!
இலங்கை அரச தரப்பை சேர்ந்த சிலருக்கு பயணத்தடை விதிக்க சில நாடுகள் திட்டமிட்டுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அத்தோடு, வெளிநாடுகளிலுள்ள அவர்களது சொத்துக்களை முடக்குவதற்கும் குறித்த நாடுகள் கலந்தாலோசித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி தொடர்பாக சர்வதேச நாடுகள் அதிக கரிசனை கொண்டுள்ளன.
இந்நிலையில், அரசியல் குழப்பநிலை நீடிக்குமானால் அதற்கு காரணமான உறுப்பினர்களுக்கு குறித்த தடையை விதிக்க எதிர்ப்பார்ப்பதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிரித்தானியா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் போன்றவையே இதுகுறித்து ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் நல்லாட்சி பிளவுற்று பிரதமர் மாற்றம் ஏற்பட்ட பின்னர் நீடித்த குழப்பநிலை தீர்வதற்குள், ஜனாதிபதி மைத்திரி நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தலையும் அறிவித்தார்.
இதனால் குழப்பநிலை தீவிரமடைந்து நாடாளுமன்ற கலைப்புக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடையும் விதித்துள்ளது. இவ்வாறான பின்னணியில் நாடாளுமன்றம் கூடியபோதும், ஆளும் மற்றும் எதிர்த்தரப்புக் மத்தியில் நாடாளுமன்றில் ஏற்பட்ட கடும் முறுகல் நிலையானது சர்வதேச ரீதியில் பேசுபொருளாகவும், விமர்சனத்திற்கும் உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.