ஐ.தே.க.விற்காக கூச்சலிடும் கூட்டமைப்பு தமிழர் விடயத்தில் மௌனித்திருப்பது ஏன்?
ஐக்கிய தேசிய கட்சிக்கும், ரணில் விக்ரமசிங்கவிற்காகவும் நாடாளுமன்றில் கூச்சலிடும் தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழர் விடயத்தில் மாத்திரம் மௌனம் காப்பது ஏன் என, தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற சமகால அரசியல் நிலமைகள் குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர்,
”மூன்றரை வருடங்கள் எதிர்கட்சி தலைவராக பதவி வகித்த நீங்கள் தமிழ் மக்களுக்கு என்ன சாதித்தீர்கள் என எதிர்க்கட்சி தலைவரும், கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அந்த பதவிக்கும், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கும் தொடர்பில்லை என பதிலளித்துள்ளார்.
அவருடைய இந்த கருத்து அபத்தமானது. அவரது இக்கருத்து பேரினவாதிகளை திருப்திபடுத்தி, அதனூடாக தமது பதவியை பாதுகாத்துக் கொண்டு சுகபோகங்களை அனுபவிப்பதற்கான முயற்சியாகவே தோன்றுகிறது.
ஐ.தே.க.விற்காக நாடாளுமன்றில் கூச்சலிடும் கூட்டமைப்பினர், போருக்கு பின்னரான 9 வருடங்களில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுவரும் தமிழ் மக்களுக்காக ஒரு தடவையேனும் இவ்வாறு நாடாளுமன்றில் பேசியதுண்டா?
இன்று ரணில் விக்ரமசிங்கவை காப்பாற்றுவதற்கு நீதிமன்றம் சென்றுள்ள கூட்டமைப்பு, தமிழ் மக்களுக்காக எப்போதேனும் நீதிமன்றம் சென்றுள்ளதா?” எனக் கேள்வி எழுப்பினார்.